உலகில் 70 மில்லியன் பேர் அகதிகளாக இடம்பெயர்வு

போர், பாகுபாடு மற்றும் மோதல்கள் காரணமாக உலகளவில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 70 மில்லியன்களாக அதிகரித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக செயற்பட்டு வரும் ஐ.நா அகதிகள் நிறுவனத்தின் உச்ச எண்ணிக்கையாக இது உள்ளது.

முந்தைய ஆண்டை விடவும் 2.3 மில்லியனாக அதிகரித்து சுமார் 70.8 மில்லியன் பெயர் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா அகதிகள் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 20 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவான எண்ணிக்கையின் இரட்டை மடங்காகும். இதன்படி ஒவ்வொரு நாளும் சராசரியாக 37,000 பேர் இடம்பெயர்கின்றனர்.

“போர், பாகுபாடு மற்றும் மோதல்களில் இருந்து மக்கள் பாதுகாப்புப் பெறும் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கை மேலும் உறுதி செய்வதாக இந்த எண்ணிக்கையை நாம் பார்க்கிறோம்” என்று அகதிகளுக்காக ஐ.நா உயர்ஸ்தானிகர் பிலிப்போ கிரண்டி குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கை மூலம் உலக சனத்தொகையில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதைக் காட்டுவதாக உள்ளது. 1951 ஐ.நா நிறுவப்பட்டது தொடக்கம் 1992 வரை மக்கள்தொகையில் 1000 பேரில் 3.7 பேராக இருந்த இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2018 இல் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 9.3 பேராக அதிகரித்துள்ளது.

உண்மையில் 2018 இல் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை இதனை விடவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. வெனிசுவேலாவின் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினையால் இடம்பெயர்ந்த மக்களின் விபரம் முழுமையாக இதில் உள்ளடக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் சுமார் நான்கு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக சில கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

உலகளாவிய அகதிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் சிரியா, ஆப்கானிஸ்தான், தென் கூடான், மியன்மார் மற்றும் சோமாலியா நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். வேறு எந்த நாடுகளை விடவும் சிரிய அகதிகளின் எண்ணிக்கை 6.7 மில்லியன்களாக இருப்பதோடு அதற்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானில் 2.7 மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளனர்.

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை