08 வாரங்கள் கடந்தும் 'கோப் குழு' பரிந்துரைக்கு இன்னும் பதிலில்லை

எட்டு வாரங்கள் கடந்துள்ள போதும் பல அரச நிறுவனங்கள் குறித்த கோப் குழுவின் பரிந்துரைக்குப் பதில் வழங்கப்படவில்லையென கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து கோப் குழுவுக்கு அறிவிக்கவில்லையென்றும் அவர் சபாநாயகரிடம் முறையிட்டார். பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின் பின்னர் 120/4 நிலையியற் கட்டளையின் கீழ் இந்த விடயம் குறித்து அவர், சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி கோப் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு எட்டு வாரங்களாகியும் பல அரச நிறுவனங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் எந்தவிதமான பின்னூட்டத்தையும் கோப் குழுவுக்கு அனுப்பிவைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கோப் குழுவின் பரிந்துரைகள் குறித்து எடுத்த நடவடிக்கைகளின் பின்னூட்டத்தை வழங்காது நிலையியற் கட்டளைகளைப் பலப்படுத்துவதில் எந்தப் பலனும் கிடைக்காது என்றும் அவர் கூறினார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை திணைக்களம் பின்னூட்டம் கொண்ட அறிக்கையை அனுப்பியுள்ளது. எனினும் ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் குறித்து எடுத்த நடவடிக்கைகளை விவசாய அமைச்சு தெரியப்படுத்தவில்லை. சுகாதார அமைச்சின் கீழ் உள்ள மருந்தாக்கல் கூட்டுத் தாபனம் உள்ளிட்ட சில அரசாங்க நிறுவனங்கள் பற்றிய அறிக்கைகளும் அனுப்பி வைக்கப் படவில்லை.

இதுபோன்று பல அரச நிறுவனங்கள் கோப் குழுவின் பரிந்துரை குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி மீள அறிவிக்காதுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை