சூடான் ஆர்ப்பாட்டக்காரர்களின் உயிரிழப்பு 108 ஆக அதிகரிப்பு

பேச்சுக்கான இராணுவ அழைப்பு நிராகரிப்பு

இராணுவத்தின் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கான அழைப்பை சூடான் ஆர்ப்பாட்டத் தலைவர்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். தலைநகர் கார்டூமில் ஆர்ப்பாட்ட முகாமை அகற்றும் இராணுவ நடவடிக்கையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஐ தாண்டி இருப்பதாக எதிர்த் தரப்புடன் தொடர்புடைய மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

துணைப் படையினரால் நைல் நதியில் இருந்து 40 உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக சூடான் மருத்துவர்களின் மத்திய குழு குறிப்பிட்ட நிலையிலேயே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் இராணுவ தலைமையகத்திற்கு வெளியில் பல வாரங்களாக நிலைகொண்டிருக்கும் ஆர்ப்பாட்ட முகாம் மீது கடந்த திங்கட்கிழமை இராணுவம் படை நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டது. இதற்கு அடுத்த தினத்தில் நதியில் இருந்து உடல்கள் எடுக்கப்பட்டதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

இதில் 108 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டிருக்கும் மருத்துவர்கள் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

எனினும் இந்த வன்முறைகளில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 46 இற்கு மேற்படவில்லை என்று சுகாதார அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அரச ஊடகமான சுனா குறுப்பிட்டுள்ளது.

பலம்மிக்க இராணுவ கெளன்சில் மற்றும் எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு இடையில் பல வாரங்கள் நீடித்த இழுபறியின் முக்கியமான தருணத்திலேயே ஆர்ப்பாட்ட முகாமை கலைப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஏப்ரலில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் சூடானில் சிவில் அரசு ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலேயே இராணுவத்திற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இழுபறி நீடித்தது.

எதிர்க்கட்சிகளுடன் இதுவரை எட்டப்பட்ட உடன்படிக்கைகளை இராணுவ கெளன்சில் இரத்துச் செய்த நிலையில் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்ததை அடுத்து கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது.

எனினும் இராணுவத்தை நம்ப முடியாது என குறிப்பிட்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் எதிர்த்தரப்பினர் கூட்டணி அந்த அழைப்பை நிராகரித்துள்ளது.

Fri, 06/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை