இலங்கைக்கு ஆறுதல் வெற்றி: தொடரை வென்றது பாக்.அணி

19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடர்

சுற்றுலா பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணி மற்றும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி ஆகியவை இடையிலான இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவதும் கடைசியுமான போட்டியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த இளையோர் ஒருநாள் தொடரில் முதல் நான்கு போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், ரொஹைல் நசீர் தலைமையிலான பாகிஸ்தானின் 19 வயதுக்கு உட்பட்ட அணி தொடரை 3-1 என கைப்பற்றியிருந்தது.

இதனால், தொடரின் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி ஒன்றைப் பெற்று தொடரினை நிறைவு செய்ய எதிர்பார்த்த வண்ணம் கமில் மிஷார தலைமையிலான இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி களமிறங்கியது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற, கமில் மிஷ்ரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பாகிஸ்தானின் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு வழங்கினார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானின் 19 வயதுக்கு உட்பட்ட அணி பாஸித் அலி, மொஹமட் ஹரீஸ் மற்றும் காசிம் அக்ரம் ஆகியோரின் அரைச் சதங்களோடு 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் துடுப்பாட்டம் சார்பாக, பாசித் அலி 82 பந்துகளுக்கு 7 பெளண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை குவிக்க, மொஹமட் ஹரீஸ் 47 பந்துகளில் 5 பெளண்டரிகளுடன் 54 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், காசிம் அக்ரம் 51 ஓட்டங்களை குவித்ததோடு அணியின் தலைவர் ரொஹைல் நாசிர் 41 ஓட்டங்களுடன் பெறுமதி சேர்த்திருந்தார்.

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பந்துவீச்சில் புனித செர்வதியஸ் கல்லூரி வீரரான டில்ஷான் மதுசங்க 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்க்க சமிந்து குஷான், சந்துன் மெண்டிஸ், கவிந்து நதீஷான், கமில் மிஷ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 265 ஓட்டங்களை அடைய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி பதிலுக்கு துடுப்பாடியது.

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு அதன் தலைவர் கமில் மிஷ்ரா, ரவிந்து ரஷந்த ஆகியோர் அட்டகாசமான அரைச்சதங்கள் பெற்றனர்.

இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 46.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 267 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை தரப்பின் வெற்றிக்கு உதவிய கமில் மிஷ்ரா 5 பெளண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களை குவித்ததோடு, ரவிந்து ரசந்த 13 பெளண்டரிகள் அடங்கலாக 67 பந்துகளுக்கு 85 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

அவிஷ்க தரிந்துவும் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பாக சிராஸ் கான் மற்றும் மொஹமட் வசீம் ஜூனியர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றி இருந்த போதிலும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

இப்போட்டியில் கிடைத்த ஆறுதல் வெற்றியுடன் இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட அணி 5 போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரினை 3-2 என நிறைவு செய்து கொள்கின்றது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைவர் கமில் மிஷார தெரிவாகியதுடன், தொடர் நாயகன் விருதினை பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைவர் ரொஹைல் நசீர் பெற்றுக் கொண்டார்.

Fri, 06/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை