பெரும் நிறுவனங்களுக்கு 1000 பில். டொலர் செலவு

உலக வெப்பம் உயர்ந்து பருவநிலையில் உருவாகும் மாற்றத்தால் உலகின் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு 1 டிரில்லியன் டொலர், அதாவது 1000 பில்லியன் டொலர்வரை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த அறநிறுவனமான சி.டி.பீ அதனைத் தெரிவித்தது. உலகின் மிகப் பெரிய 215 நிறுவனங்களிடம் இருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த மதிப்பீட்டை அது வெளியிட்டது.

அப்பிள், மைக்ரோசொப்ட், சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும். அதீத வெப்பம், கணிக்க முடியாத தட்பவெப்பம், வெப்ப வாயு வெளியேற்றத்துக்காக விதிக்கப்படும் வரி ஆகிய அம்சங்களின் அடிப்படையில் 1000 பில்லியன் டொலர்வரை செலவாகுமெனக் கணிக்கப்பட்டது.

உலக வெப்ப உயர்வு குறித்து, வர்த்தக நிறுவனங்கள் அண்மைக் காலமாக அதிக அக்கறை காட்டிவருகின்றன.

கடுமையான புயல், திடீர் வெள்ளம், காட்டுத் தீ முதலியவற்றால் ஏற்படும் பேரிடர்களால், வர்த்தக நிறுவனங்கள் பல வகையிலும் பாதிக்கப்படுகின்றன.

உலகின் பெரிய எண்ணெய் நிறுவனமான ஷெல், பாரிஸ் பருவநிலை மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை நிறைவேற்றத் தான் கடப்பாடு கொண்டுள்ளதாகச் கடந்த ஆண்டு அறிவித்தது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் நிர்வாகிகளுக்குக் கூடுதல் அனுகூலங்களை அது வழங்கிவருகிறது.

அதேவேளையில், உலக வெப்ப உயர்வு காரணமாகச் சில புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகுமென்றும் வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

மின்சார வாகனங்கள் தொடக்கம், மாசுக் கலப்பற்ற எரிசக்தித் தயாரிப்பு வரை பலவிதமான வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்குமென அவை குறிப்பிட்டன.

அந்த வர்த்தக வாய்ப்புகளின் மதிப்பு சுமார் 2 டிரில்லியன் டொலர்களாகும்.

Fri, 06/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை