சிரியா வீழ்த்தப்பட்டதற்கு பழிவாங்கவே இலங்கை மீது தாக்குதல்

ஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி அறிவிப்பு

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழு தனது கடைசி கோட்டையாக இருந்த சிரிய நகரான பாகுஸ் வீழ்த்தப்பட்டதற்குப் பழிதீர்ப்பதற்காகவே இலங்கை மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக அப் பயங்கரவாதக் குழுவின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறை பக்தாதி தோன்றும் பிரசார வீடியோ ஒன்றை ஐ.எஸ் வெளியிட்டுள்ளது. தமது போராளிகள் கொல்லப்பட்டது மற்றும் கைது செய்யப்பட்டதற்கு பழிதீர்ப்பதாக அந்த வீடியோவில் பக்தாதி என்று

கூறிக்கொள்ளும் நபர் சூளுரைத்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மொசூல் நகரில் இருந்து தன்னிச்சையாக ஈராக் மற்றும் சிரியாவில் கிளாபத் (இஸ்லாமிய பேரரசு) பிரகடனம் ஒன்றை வெளிட்டபோது பக்தாதி கடைசியாக வீடியோ ஒன்றில் தோன்றி இருந்தார்.

இந்நிலையில் ஐ.எஸ் அமைப்பின் அல் புர்கான் ஊடக வலையமைப்பில் நேற்று வெளியான இந்த புதிய வீடியோவில், பிராந்தியத்தில் ஐ.எஸ்ஸின் கடைசி கோட்டையான பாகுஸில் தோற்கடிக்கப்பட்டது குறித்து பக்தாதி அறிந்து வைத்துள்ளார்.

“பாகுஸ் யுத்தம் முடிந்துவிட்டது” என்று பக்தாதி குறிப்பிடுகிறார். அருகில் துப்பாக்கி ஒன்றுடன் தோன்றும் பக்தாதி மூவருடன் உரையாடுவது போல் அந்த வீடியோவில் காட்சி அளிக்கிறார்.

18 நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோ முடிவுற்ற பின்னர், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இலங்கை குண்டுத் தாக்குதல்கள் குறித்த ஓடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது பக்தாதியின் புகைப்படம் மெல்ல மறைந்து இலங்கை தாக்குதல் குறித்து பேசும் ஒலி கேட்கிறது.

“இலங்கையில் உள்ள உங்களது சகோதரர்கள் பாகுசியில் உங்களது சகோதரர்களுக்காக பழிதீர்க்க ஈஸ்டர் நேரத்தில் சிலுவை வீரர்களின் படுக்கைகளை அதிரச் செய்த அவர்களின் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மூலம் ஏகத்துவவாதிகளின் (ஐ.எஸ் உறுப்பினர்களின்) இதயங்களை ஆறுதல்படுத்தினர்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க ஆதரவுடைய குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படை கடந்த மார்ச் மாதம் ஐ.எஸ் இடம் இருந்து பாகுஸ் நகரை கைப்பற்றி, அதன் ‘கிளாபத்’ வீழ்த்தப்பட்டதாக பிரகடனம் செய்தது.

தலைமறைவாக உள்ள பக்தாதி மிக அரிதாகவே பொதுவெளியில் தனது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

 

Wed, 05/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை