இஸ்ரேல் மற்றும் காசா இடையில் பரஸ்பரம் தாக்குதல்கள் உக்கிரம்

6 பலஸ்தீனர், ஒரு இஸ்ரேலியர் பலி

அண்மைய ஆண்டுகளில் மிக மோசமான தாக்குதல்களால் இஸ்ரேல் மற்றும் காசா பகுதியில் உள்ள போராளிகள் பரஸ்பரம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது 430க்கும் அதிகமான ரொக்கெட் குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இதில் அதிகமான தாக்குதல்களை முறியடிக்க முடிந்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டபோதும் இந்த தாக்குதல்களில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளார்.

வடக்கு காசாவில் இருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் அஷ்கலோன் பகுதியில் உள்ள தனது வீட்டின் மீது ரொக்கெட் குண்டு சிதைவுகள் விழுந்ததிலேயே அந்த இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த வார இறுதியில் காசா பகுதியில் சுமார் 200 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் ஆறு பலஸ்தீகர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் கர்ப்பிணித் தாய் ஒருவரும் அவரது குழந்தை ஒன்று இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் ஏற்பட்ட மோதல் நிறுத்தத்தை மீறிய தற்போதைய சண்டை வெடித்துள்ளது. இங்கு நீண்ட கால யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு எகிப்து மற்றும் ஐக்கிய நாடுகள் அண்மைக் காலமாக முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முற்றுகையில் உள்ள காசாயில் பலஸ்தீனர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போதே தற்போதைய பதற்றம் வெடித்தது. பலஸ்தீன துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய சூட்டில் எல்லை வேலிக்கு அருகில் உள்ள இரு இஸ்ரேலிய படையினர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் இரு பலஸ்தீன போராளிகள் கொல்லப்பட்டனர். அதே தினத்தில் இஸ்ரேலிய எல்லை வேலிக்கு அருகில் இரு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய தாக்குதலால் பலியானதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் 14 மாத பெண் குழந்தை ஒன்றும் அவளது தாயும் கொல்லப்பட்டதாக காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் பலஸ்தீன ரொக்கெட் தவறி விழுந்தே இவர்கள் பலியாகி இருப்பதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. இந்த தாக்குதல்களில் சுமார் 40 பலஸ்தீனர்கள் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பாரிய தாக்குதல்களை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நேற்று அறிவித்தார். காசா பகுதியைச் சுற்றி இராணுவத்தை பலப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து தரப்பும் உடன் மோதல்களை நிறுத்தும்படி அழைப்பு விடுத்திருக்கும் மத்திய கிழக்கு அமைதி முயற்சிக்கான ஐ.நா விசேட இணைப்பாளர் நிகொலாய் மிலாடெனொவ், கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட உடன்பாடுகளுக்கு திரும்பும்படியும் கோரியுள்ளார்.

“காசாவில் மற்றொரு ஆபத்தான மோதல் ஏற்பட்டிருப்பது மற்றும் உயிரிழப்புகள் பற்றி நான் கவலை அடைகிறேன்” என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் தெற்கு இஸ்ரேல் மீது பல ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியது. எனினும் இரு தரப்பிலும் எந்த உயிரிழப்பும் இடம்பெறவில்லை.

தொடர்ந்து ஏப்ரல் ஆரம்பத்தில் எகிப்தின் மத்தியஸ்தத்தில் யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்பட்டபோதும், அதனை இஸ்ரேல் மீறுவதாக ஹமாஸ் மற்றும் அதன் கூட்டணி போராட்டக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன. கடந்த 2008 தொடக்கம் இஸ்ரேல் மற்றும் காசா இடையில் மூன்று யுத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

 

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை