சிரிய கிளர்ச்சியாளர் பகுதியில் வான் தாக்குதல்: 9 பேர் பலி

வட கிழக்கு சிரியாவில் அந்நாட்டு அரச படை மற்றும் அதன் கூட்டணி நாடான ரஷ்யா கடந்த சனிக்கிழமை நடத்திய வான் தாக்குதல்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக கண்காணிப்புக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இத்லிப், ஹமா மற்றும் அலெப்போ மாகாணங்களில் சிரிய இராணுவம் மற்றும் ரஷ்யா 100க்கும் அதிகமான வான் தாக்குதல்களை நடத்தியதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பாக வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ ஹெலிகள் மூலம் பல பீப்பாய் குண்டுகளும் வீசப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் இத்லிப் மற்றும் ஹமா பகுதிகளிலேயே 9 சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

பாடசாலைகள், சுகாதார வசதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மோசமாக தாக்கப்பட்டிருப்பதாக ஐ.நா மனித உரிமை இணைப்பகம் குறிப்பிட்டுள்ளது.

தீவிரவாதக் குழுக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதாக சிரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதிலிப்பின் பெரும்பகுதி மற்றும் அலெப்போ மற்றும் ஹமாவின் பகுதிகள் அல் கொய்தாவின் முன்னாள் சிரிய கிளையாக இயங்கிய ஹயாத் அல் தஹ்ரிர் அல் ஷாம் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த பகுதிகளில் அரச கூட்டணியான ரஷ்யா மற்றும் கிளர்ச்சியாளர் ஆதரவு துருக்கிக்கு இடையில் கடந்த செப்டெம்பரில் ஏற்பட்ட யுத்த நிறுத்தத்தை மீறி அரச படை இங்கு அண்மைய மாதங்களாக தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கடந்த சில தினங்களில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கு மீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிரிய சிவில் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை