மிலேனியம் வருடத்தில் விருது வென்ற வீரரத்ன

ஒப்சேர்வர்- மொபிடெல்- சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கும் விழாவின் 41 ஆவது அங்கம் விரைவில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் 2000 ம் வருட மிலேனியம் விருது வழங்கல் விழாவில் கண்டி திரித்துவக் கல்லூரியின் கௌசல்ய வீரரட்ன விருது வென்றார். முன்னாள் இலங்கை வீரர் கௌசல்ய வீரரட்ன வலது கை மத்திய வேக பந்து வீச்சாளர் ஆவார். அவுட்- ஸ்விங்கர் பந்து வீச்சு அவரது சிறப்பம்சமாகும். சகலதுறை ஆட்டக்காரராக தமது ஆரம்ப காலத்திலேயே கணிக்கப்பட்ட இவர் துடுப்பாட்டத்தை விட பந்து வீசுவதிலேயே அதிக திறமை காட்டினார். அத்துடன் துடுப்பாட்டத்திலும் அவர் சிறப்பாக விளையாடினார். திரித்துவ கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே 19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலக கிண்ண இலங்கை அணியில் அவர் முக்கிய வீரராக இருந்தால். அச்சுற்று் போட்டியில் 12 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் தேசிய அணியில் அவருக்கான வாய்ப்பு அதிகரித்தது.

2000ம் வருடம் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்றதையடுத்து அதே வருடம் இடம்பெற்ற ஆசிய கிண்ண சுற்றுப் போட்டியில் அவர் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்தார். எனினும் உடல் உபாதை காரணமாக அவர் இலங்கை அணியில் அவரது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது.

2003 இல் தனது 11 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய கௌசல்ய மீண்டும் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்ய ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கலந்திருக்க வேண்டியாயிற்று. ஐந்து வருடங்களின் பின்னர் தனது பாணியை வெற்றிகரமாக மாற்றியமைத்துக்கொண்டு அவர் மீண்டும் கிரிக்கெட்டில் இறங்கியபோது 2005 இல் உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் 12 பந்துகளில் அரைச் சதம் பெற்றார். உள்ளூரில் அது இன்றும் கூட சாதனையாக உள்ளது. இதன் மூலம் தேசிய தெரிவுக்குழுவின் கவனத்தை ஈர்த்து ஆசிய கிண்ணத்துக்கான 2008 ஆம் ஆண்டு சுற்றுலா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்காக சுற்றுலா ஆகிய இரண்டிலும் இடம்பிடித்தார்.

1981இல் ஜனவரி 29ஆம் திகதி கம்பளையில் பிறந்த கௌசல்ய வீரரட்ன இடது கை துடுப்பாட்ட வீரர் ஆனால் வலதுகை பந்துவீச்சாளர். இலங்கைக்காக 15 ஒருநாள் மற்றும் 5 ரி/20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் 2008 அக்டோபரில் கனடாவில் உள்ள கிவ்சிட்டியில் நடைபெற்ற போட்டியில் அவர் ரி/20 இல் அறிமுகம் பெற்றார். அப்போட்டியில் அவர் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் 13 பந்துகளில் 20 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார்.

2005 நவம்பர் முதலாம் திகதி கௌசல்ய வீரரட்ன ராகம அணிக்காக குருணாகல் யூத் அணிக்கு எதிராக கொழும்பு தேஷ்டன் கல்லூரி மைதானத்தில் ஒருநாள் போட்டியொன்றில் விளையாடினார். அப்போட்டியில் அவர் 12 பந்துகளில் அரைச்சதம் அடித்து சாதனையொன்றை ஏற்படுத்தினார். அச்சமயத்தில் முதல்தர போட்டிகளில் அடம் ஹோலியோக் 15 பந்துகளில் அரைச்சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அப்போட்டியில் மொத்தம் 18 பந்துகளில் கௌசல்ய 66 ஓட்டங்களைப் பெற்றார். 50 ஓட்டங்களைப் பெற அவர் 7 சிக்சர்களையும் 2 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். அதில் 5 சிக்சர்கள் ஒரே ஓவரில் அடிக்கப்பட்டன. அஜித் ஏக்கநாயக்க என்ற 40 வயது வீரரே அவரக்கு பந்து வீசி நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார். அவரது அந்த ஓவரில் மட்டும் 34 ஓட்டங்கள் பெறப்பட்டன.

ஒருநாள் மற்றும் ரி/20 போட்டிகளில் மட்டுமின்றி இலங்கை ஏ அணியிலும் கௌசல்ய விளையாடினார். ரஸல் ஆர்னல்டின் தலைமையில் 2003 செப்டம்பரில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை ஏ அணியில் கௌசல்ய இடம்பிடித்தார்.

ஒப்சேர்வர் விருதை பெற்ற முதலாவது திரித்துவக் கல்லூரி வீரர் கௌசல்ய ஆவார். அவரைத் தவிர 2012 இல் திரித்துவக் கல்லூரி வீரர் நிரோஷன் டிக்வெல்லவும் 2018 இல் ஹஸித போயகொடவும் ஒப்சேர்வர் விருது வென்ற மற்றைய திரித்துவ கல்லூரி வீரர்களாவர்.

இந்நிலையில் 41வது ஒப்சேர்வர் மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருது வழங்கல் விழா சூடு பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக வீர வீராங்கனைகளுக்கான வாக்குகள் பெருமளவில் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒப்சேர்வர் - மொபிடெல் சிறந்த பாடசாலை வீரருக்கான விருது வழங்கல் வி​ழா 78-1979 காலப்பகுதியில் முதலில் ஆரம்பமானது.

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை