பெண்களுக்கான மரதன் ஓட்டம்; தெற்காசிய சாதனை படைத்த ஹிருனி

இலங்கையின் தேசிய மரதன் ஓட்ட சம்பியனான ஹிருனி விஜேயரத்ன ஜேர்மனியில் நடைபெற்ற டுஸல்டோர்ப் மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு புதிய தேசிய சாதனையுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அவர் போட்டியை நிறைவுசெய்ய இரண்டு மணித்தியாலங்களும் 34.10 செக்கன்களை எடுத்துக் கொண்ட ஹிருனி, தனது சொந்த தேசிய சாதனையை ஒரு வருட காலப்பகுதியில் மீண்டும் முறியடித்தார்.

அத்துடன், பெண்களுக்கான மரதன் ஓட்டத்தில் தெற்காசியாவில் அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்த அவர், இவ்வருட இறுதியில் கட்டாரில் நடைபெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக போட்டியிடும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார்.

போட்டியின் பிறகு தனது வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட ஹிருனி விஜேரத்ன, இலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானோருக்கு தனது ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.

போட்டியின் முதல் பாதியில் அதிக காற்று வேகம் இருந்தது. அதேபோல, 7 பாகைக்கும் 10 பாகைக்கும் இடைப்பட்ட வெப்பநிலை காணப்பட்டது. எனினும், போட்டியை சிறப்பாக ஓடிமுடித்தேன். அதிலும் போட்டியின் முதல் மணித்தியாலத்தை 1.15.40 செக்கன்களில் ஓடிமுடித்ததுடன், முதல் 35 கிலோ மீற்றரிலும் நான் தான் முதலிடத்தில் இருந்தேன். அதன்பிறகு தான் ஜேர்மன் வீராங்கனை என்னை முந்திச் சென்றார். எனினும், காலில் ஏற்பட்ட உபாதையுடன் போட்டியிட்டு நான் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டேன் என தெரிவித்தார்.

முன்னதாக கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் நடைபெற்ற அரை மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட ஹிருனி, அரை மரதன் ஓட்டப் போட்டியில் தனது 2ஆவது அதிசிறந்த காலத்தையும் பதிவுசெய்தார். அத்துடன், இலங்கை வீராங்கனையொருவர் அரைமரதன் ஓட்டப் போட்டியொன்றில் பதிவுசெய்த இரண்டாவது அதிசிறந்த காலமாகவும் அது இடம்பிடித்தது.

அமெரிக்காவில் கடந்த 2 தசாப்தங்களாக வசித்து வரும் ஹிருனி விஜேரத்ன, 2017இல் முதற்தடவையாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றியிருந்தார்.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பீ.எப் மொஹமட்

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை