தெற்காசிய விளையாட்டு விழாவில் 750 வீர, வீராங்கனைகள் பங்கேற்பு

நேபாளம் காத்மன்டு நகரில் தஸராத் மைதானத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கையிலிருந்து 750 பேரை அனுப்ப விளையாட்டுத்துறை அமைச்சு தயாராகி வருகின்றது. இதுவே தெற்காசிய விளையாட்டு விழாவின் சரித்திரத்திலேயே அதிகளவு இலங்கையர்கள் பங்குபற்றும் சந்தர்ப்பமாகும். இதற்காக விசேட விமானங்கள் இரண்டை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. விமான பயணச் சீட்டுக்களுக்காகவும் விளையாட்டு குழு பராமரிப்புக்காகவும் பெருமளவு பணத்தை செலவிட வேண்டியுள்ளது ஆயினும் நேபாள விளையாட்டு விழாவுக்கு முதலிடம் வழங்க விளையாட்டு அமைச்சு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில 2016ம் ஆண்டு குவஹாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 23 விளையாட்டுகளுக்கு வீர, வீராங்கனைகள் 484 பேர் கலந்துகொண்டதோடு அவர்களுடன் அதிகாரிகள் 200 பேரும் அவர்களுடன் இணைந்துகொண்டார்கள். அவ்விழாவுக்காக வாடகைக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானமொன்றை விளையாட்டு அமைச்சு அமர்த்தியது. காத்மண்டு தெற்காசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை குழுவின் தயார் நிலைமை குறித்து ஆராய விசேட கூட்டமொன்று அண்மையில் விளையாட்டு அமைச்சில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு விளையாட்டு விழாவை பிரதிநிதித்துவம் செய்யும் விளையாட்டுக்கழக தலைவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழு பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

விளையாட்டு விழாவின் 27 விளையாட்டுகளுக்காக இலங்கை இராணுவததின் 27 அதிகாரிகளை அனுமதிக்கவும் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய தொடர்பாடல்களுக்கான நடவடிக்கைகள் அந்த இராணுவ அதிகாரிகள் மூலம் விளையாட்டு அமைச்சில் அமைக்கப்பட்டுள்ள ‘சாக் செயலாளர் காரியாலயம்’ ஊடாக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் விளையாட்டுக்காக மேலதிக பயிற்சிகள் தேவையேற்படின் அவற்றை இராணுவ மைதானத்தில் மேற்கொள்ளப்படும் என பிரதி விளையாட்டுத்துறை பணிப்பாளர் ஐ. பி. விஜேரத்ன தெரிவித்தார். இறுதி கட்ட பயிற்சி நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் பூரண ஒத்துழைப்பை வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக விஜேரத்ன தெரிவித்தார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு குழுக்களின் பெயர் பட்டியல் மற்றும் வெளிநாட்டு, உள்நாட்டு பயிற்சியாளர்கள் தொடர்பான விபரங்களை இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பெற்றுத் தருமாறு அனைத்து விளையாட்டு கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காத்மன்டு தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு 27 விளையாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு தற்போது 26 விளையாட்டுக்கழகங்கள் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் டேபிள் டென்னிஸின் போட்டிக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

டேபிள் டென்னிஸ் தேசிய கழகம் கலைக்கப்பட்டு இடைக்கால குழுவொன்றின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருவதால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக பயிற்சிகளை ஆரம்பிக்குமாறு இடைக்கால குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இறுதியாக நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டின் மூலம் வெள்ளிப்பதக்கமொன்றும் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் 7ம் கிடைத்ததுடன் தங்கப் பதக்க கனவு கலைந்தது.

இந்தியாவில் 2016 குவஹாதியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை 25 தங்க பதக்கங்கள், 63 வெள்ளிப் பதக்கங்கள் 98 வெண்கலப் பதக்கங்களையும் வெற்றிக்கொண்டது.

அதைவிட அதிக முன்னேற்றத்தை அடைய வேண்டிய அவசியம் தேசிய விளையாட்டு கழகங்களுக்கு உண்டென்று விளையாட்டு அமைச்சும் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவும் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கை இறுதியாக நடைபெற்ற விளையாட்டு விழாவில் நீச்சல் மற்றும் தடகளப் போட்டிகளிலேயே அதிகளவு பதக்கங்கள் கிடைத்தன. அங்கு நீச்சல் போட்டிகளில் 12 தங்கப்பதக்கங்கள், 16 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. தடகளப் போட்டிகளில் 9 தங்கப்பதக்கங்கள் 11 வெள்ளிப் பதக்கங்கள் 17 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.

தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் போட்டிகளை நடத்தும் நேபாளம் ஆகிய நாடுகள் பங்குபற்றுகின்றன. இறுதியாக 2016 ல் நடைபெற்ற விளையாட்டு விழாவில் இந்தியா 188 தங்கப்பதக்கங்களையும், 90 வெள்ளிப் பதக்கங்களையும், 30 வெண்கலப் பதக்கங்களையும் மொத்தமாக 308 பதக்கங்களுடன் பாரிய இடைவெளியுடன் முதலாம் இடத்தைப் பெற்றது.

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை