பாலமுனை கடற்கரையில் வெடிபொருட்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம் பாலமுனை, சின்னப்பாலமுனை கடற்கரைப் பகுதியில் நேற்று(01) வெடிபொருட்கள் சிலவும் சயனைட் குப்பியும் மீட்கப்பட்டது.

ஒலுவில் துறைமுகத்தை அண்டிய சின்னப் பாலமுனை கடற்கரையோரப் பிரதேசத்தில் காணப்பட்ட வெடிபொருட்கள் பற்றிய தகவல் கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்றதையடுத்து

அப்பிரதேசத்திற்கு விரைந்த கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இவ் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆறு வெடிகுண்டுகள், துப்பாக்கி ரவைகள் சிலவும், சயனைட் குப்பியும் ஒரு பையினுள் இடப்பட்ட நிலையில் கடற்கரையோரம் வீசப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புப் படையினரால் இவை மீட்கப்பட்டுள்ளன.

நேற்றுக் காலை வேளையில் இப்பகுதியில் இவ்வெடிபொருட்கள் வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. உள்ளுரில் தயாரிக்கப்பட்ட குண்டு என அடையாளம் காணப்பட்டுள்ள ஆறு வெடி குண்டுகளில் இரண்டை குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் செயலிழக்கச் செய்தனர். மீதமான வெடி குண்டுகளையும் சயனைட் குப்பியினையும் சில துப்பாக்கி ரவைகளையும் படையினர் மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.

இப்பிரதேசத்தை அண்டிய பகுதிகள் நேற்றைய தினம் பாதுகாப்புப் படைத் தரப்பினரால் விஷேட தேடுதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரும் ஏனைய பாதுகாப்புத் தரப்பினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அட்டாளைச்சேனை தினகரன், பாலமுனை கிழக்கு தினகரன், ஒலுவில் கிழக்கு தினகரன், அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர்கள்)

நமது நிருபர்கள்

 

Thu, 05/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை