ஸ்தம்பித நிலையில் நாட்டை வைத்திருக்க எதிர்க்கட்சி கங்கணம்

அறிவிலிகளுக்கு கல்வி அருமை புரியாது

பாடசாலைகள் யாவற்றையும் இழுத்து மூடி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை ஸ்தம்பித நிலையில் வைத்திருப்பதிலேயே எதிர்க்கட்சியினர் குறியாக இருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று பாராளுமன்றத்தில் விசனம் தெரிவித்தார்.

முழுமையாக பாடசாலைக் கல்வியை பெறாத மற்றும் போதிய கல்வி அறிவு இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்விச் செயற்பாடுகளை பிற்போடுவதால் மாணவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. அதில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

இதுவரை காலமும் பாரிய மன உளைச்சலை அடக்கி வைத்திருந்த எதிர்க்கட்சியினர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை காரணமாகக் கொண்டு அரசாங்கம் மீது எகிறிப் பாய்கின்றனர். பாராளுமன்றத்தில் அவர்கள் ஏதோ உற்சாகப் பானம் அருந்தியதுபோல் உரையாடுவது வியப்பாக இருக்கின்றது. பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டதை எதிர்க்கட்சியினர் பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கின்றனர். இன்னும் இரண்டு மாதங்கள் கடந்து பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் கூட இதே நிலைமைதான் பேசப்படும்.

நாட்டின் புலனாய்வுத்துறை திறமையாக இல்லையெனக் குற்றம்சாட்டுபவர்களிடம் பித்தளைச் சந்தியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீதும் இராணுவ தலைமையகத்துக்கு முன்பு முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேக்கா மீதும் குண்டுகளை வெடிக்கச் செய்யும்போது மட்டும் நாட்டின் புலனாய்வு பிரிவினர் திறமையானவர்களாக இருந்தார்களா? என்று நான் கேட்க விரும்புகின்றேன்.

தற்போது 10 ஆயிரத்துக்கும் அதிகமான புலனாய்வுப் பிரிவினர் உள்ளனர்.

எமது பாராளுமன்றத்தில் பாடசாலைக்குச் செல்லாதவர்களே அதிகம் உள்ளனர். அவர்களுக்கு பாடசாலைகளை மூடி வைப்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் இழப்பு பற்றி புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடையாது.

கொழும்பில் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தாலும் வடக்கில் நேற்று முன்தினம் இருந்த 45 சதவீதம் நேற்று அதிகரித்துள்ளது. வடமத்திய மாகாணத்தில் 21 சதவீத வருகை 35 சதவீதமாகவும் ஊவாவில் 20 சதவீதம் 40 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்றார்.

லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை