பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காணாவிட்டால் நாட்டுக்கு சுபீட்சம் இல்லை

தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சிறிய கும்பலை இலகுவாக அடையாளம் கண்டு அழித்துவிடலாம். ஆனால் இச்சதியின் பின்னணியிலுள்ள கும்பலை சரியாக அடையாளம் காணத் தவறினால் நாட்டுக்கு சுபீட்சம் கிடைப்பது அபூர்வமாகத்தான் இருக்குமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று தெரிவித்தார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. அதில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். வெளிச்சக்தியொன்று தமது தேவைக்காக இக்கும்பலை மிக இலகுவாக பயன்படுத்தியுள்ளது. அக்கும்பலை அடையாளம் காண்பதே முக்கியம் என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார்.

அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது-

நாட்டு மக்கள் துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் பாதுகாப்பு தொடர்பான அச்சத்திலும் இருக்கின்றனர். மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு காரணமான கும்பலை இனங்கண்டு அடியோடு ஒழிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். சமயத்தில் கூறாத சித்தாந்தங்களை செயற்படுத்த முனைந்ததன் மூலம் அவர்கள் குடும்பத்துடன் அழிந்து போனார்கள். இறுதியில் அவர்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.இவர்களின் உள்நோக்கம் என்ன என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது.

இதன் பின்னணியில் பெரும் சக்தியொன்று உள்ளது.புலிகள் இயக்கம் அரசியல் சித்தாந்தத்துக்காக தனி நாடு கோரி போராட்டம் நடத்தினர். இறுதியில் அந்த இயக்கமும் அழிந்து போயிற்று. அதேபோன்று இந்த குடும்பமும் சர்வதேச ரீதியில் இஸ்லாமிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக தமது குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளமை மடமையான செயற்பாடாகும்.

தற்கொலை செய்பவர்கள் சுவர்க்கத்துக்கு செல்ல முடியாதென இஸ்லாம் தெளிவாக கூறியுள்ளது.

இக்கும்பலுக்கு முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து எவ்வித ஆதரவும் இல்லை என்பதை என்னால் திட்டவட்டமாக கூறமுடியும். எனினும் இதன் பின்னணியிலுள்ள சக்தி அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்

 

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை