மும்பை அணி சம்பியன்

மலிங்கவின் அபார பந்துவீச்சால்

 லசித் மாலிங்கவின் அசத்தலில் இறுதிப்பந்து ஓவரின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி கொக் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்களின் ஊடாக சிறந்த ஆரம்பத்தை பெற்றது.

சர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹார் தங்களுடைய அடுத்தடுத்த ஓவர்களில் குயின்டன் டி கொக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்ற, முதல் 6 ஓவர்களில் மும்பை அணி 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதன் பின்னர் போட்டியில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்திய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சுழல் பந்து வீச்சின் மூலம் மும்பை அணியை கட்டுப்படுத்தியது. குறிப்பாக ஓட்டவேகம் கட்டுப்படுத்தப்பட்டதுடன், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு மேலும் நெருக்கடி கொடுத்தார்.

மும்பை அணியின் மத்தியவரிசை வீரர்கள் ஓரளவு ஓட்டத்தை பெற்றுக்கொண்டாலும், ஓட்டவேகம் குறைவாகவிருந்தது. இறுதியில், கிரன் பொல்லார்ட் மாத்திரம் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கிரன் பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ஓட்டங்களையும், இசான் கிசன் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். சென்னை அணியின் பந்து வீச்சில், தீபக் சஹார் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. பெப் டு ப்ளெசிஸ் வேகமாக 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க வொட்சன் நிதானமாக ஓட்டங்களை அதிகரித்தார். பின்னர், வருகைத்தந்த சுரேஷ் ரெய்னா அம்பத்தி ராயுடு மற்றும் மகேந்திரசிங் டோனி ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதில், முக்கியமாக மகேந்திரசிங் டோனி துரதிஷ்டவசமாக ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

எனினும், இதனையடுத்து வொட்சனுடன் இணைந்து டிஜே பிராவோ அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். லசித் மாலிங்கவின் பந்து ஓவரில் அதிரடியை ஆரம்பித்த இவர்கள், குர்னால் பாண்டியாவின் ஓவிரில் வொட்சனின் மூன்று சிக்ஸர்களின் உதவியுடன் வெற்றியிலக்கினை நோக்கி நகர்ந்தனர்.

ஜஸ்பிரிட் பும்ராவின் அபார பந்து வீச்சின் மூலம் இறுதி ஓவருக்கு 9 ஓட்டங்கள் என்ற நிலை ஏற்பட்டது. இதன் போது, முதல் 3 பந்துகளில் நான்கு ஓட்டங்கள் பெறப்பட்டது. இதன் பின்னர், வீசப்பட்ட 4வது பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற முற்பட்ட நிலையில், வொட்சன் ரன்–அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 5வது பந்தில் சர்துல் தாகூர் 2 ஓட்டங்களை பெற, ஒரு பந்துக்கு இரண்டு ஓட்டங்கள் தேவைப்பட்டது. இறுதி பந்தில், லசித் மாலிங்க சர்துல் தாகூரின் விக்கெட்டினை வீழ்த்த, மும்பை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் ஊடாக சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய 4வது சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி, அதிகமுறை சம்பியன் கிண்ணம் வென்ற அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றது.

 

 

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை