மியன்மார் சிறையில் இருந்து செய்தியாளர்கள் விடுதலை

மியன்மாரில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்களான வா லோன் மற்றும் யாவ் சோ ஓ இருவரும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் இரகசிய சட்டத்தை மீறியதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு நடத்திய இராணுவ நடவடிக்கையின்போது 10 முஸ்லிம் ரோஹிங்கியாக்களை மியன்மார் பாதுகாப்பு படைப்பிரிவுகள் கொலை செய்ததாக செய்தி வெளியிட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை சிறையில் அடைத்தது கடும் கண்டனத்திற்கு உள்ளானதுடன், மியன்மாரின் ஊடக சுதந்திரத்திற்கு கேடு விளைவிக்கின்ற செயல்பாடு என்று கூறப்பட்டது.

மியன்மாரின் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பிற கைதிகளோடு இந்த இரு பத்திரிகையாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

“நான் பத்திரிகையாளராக பணிபுரிவதை நிறுத்தப் போவதில்லை” என்று சிறையை விட்டு யங்கூனின் புறநகருக்கு புறப்படுகையில் வா லோன் தெரிவித்தார். “எனது செய்தி அறைக்குச் செல்லும் வரை பொறுமை இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர்கள் இருவருக்கும் பலத்த ஆதரவு இருந்ததை அடுத்து, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு தெரிவித்துள்ளது.

மியன்மாரில் கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்படுவதாகத் தொடர்ந்து குரல்கொடுத்து வந்த செயற்பாட்டாளர்கள், இந்த விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

“தைரியமான எமது நிருபர்களை மியன்மார் விடுவித்ததை இட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று ரோய்ட்டர்ஸ் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் அட்லர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரு செய்தியாளர்களும் எந்த குற்றமும் புரியவில்லை என்றும் அவர்களை விடுவிக்கும்படியும் ரோய்ட்டர்ஸ் கூறி வந்தது.

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை