இன, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முற்பட்டால் கடும் தண்டனை

தொடர்ந்தும் தீவிர தேடுதல்

200க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது

இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படுபவர்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதற்கமைய பொதுமக்களுக்கிடையில் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் பொய்யானதகவல்கள்,புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிடுவோர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கூடிய அவதானத்துடன் இருப்பதாகஅவர் மேலும் குறிப்பிட்டார். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும் தராதரமின்றி அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது கிடைக்கப் பெற்ற தகவல்களின் பிரகாரம் சிலர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-

நாடு முழுவதிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து இதற்கான சகல நடவடிக்கைகளையும் 24 மணி நேரமும் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் நாடு முழுவதிலும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் சுற்றிவளைப்பு,தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோன்று அவசரகால நிலைமையின் கீழ் முப்படையினருக்கும் எந்தவொரு இடத்தையும் சோதனையிட, சந்தேக நபர்களை கைதுசெய்ய பொருட்களை கைப்பற்ற முழுமையான அங்கீகாரம் உள்ளது என்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை,தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவி ஒத்துழைப்புகளை வழங்கும் நபர்களைத் தேடி பாதுகாப்பு படையினர் நாடளாவிய ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் மற்றும் ஏனைய படைத்தரப்பினரின் உதவியோடு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலம் 200 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை அவர்கள் கைது செய்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேற்படி அமைப்பின் பல்வேறு உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலுக்கமைய சந்தேகத்திற்கிடமான பல இடங்களை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளனர். இதற்கிணங்க பொது மக்களிடமிருந்து பெருமளவு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளதுடன் காத்தான்குடியில் வசிக்கும் அவரது சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தௌஹீத் ஜமா அத் அமைப்பினருடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் திருட்டுத்தனமாக நடத்திச் சென்றுள்ள களஞ்சியசாலைகள் ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை தௌஹீத் ஜமா அத் தலைவர் மொஹமட் காசிம் மொஹமட் சப்ராஜின் புகைப்படம் பலவற்றை தம்மிடம் வைத்திருந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை கெக்கிராவை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். இவர் மரதங்கடவலப் பகுதியில் அடகு நிலையமொன்றின் பணிபுரிந்ததாக தெரியவருகிறது. அத்துடன் பண்டாரவளைப் பகுதியில் பள்ளிவாசலொன்றை வீட்டில் நடத்தி வந்த ஒருவர் தொடர்பில் தகவலை யடுத்து அங்கு சோதனையிட்டுள்ள படையினர் நான்கு டோனர் கெமரா, ரைபிள் ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பிரதேச வாசிகளின் தகவல்களை யடுத்து மேற்படி சுற்றிவளைப்பை படையினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இராணுவஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ண ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஸாதிக் ஷிஹான்

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை