இரு திணைக்களங்களை கணனியூடாக இணைக்கும் அமைச்சரவை தீர்மானம்

நிறைவேற்ற தவறிய அதிகாரிகளிடம் பிரதமர் விளக்கம் கோரல்

குடிவரவு,குடியகல்வு திணைக்களத்தையும் சுங்கத் திணைக்களத்தையும் பாரிய குற்றவியல் திணைக்களத்துடன் (சி.பி.ஐ) கணனி மூலம் இணைப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றத் தவறியதற்கான காரணத்தை கண்டறியுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

தொழிலாளர் தினத்தன்று அலரி மாளிகையில் வைத்து சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்கள் குறித்த கணனி வலையமைப்பை மேற்கொண்டிருந்தால் முன்கூட்டியே உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என்று பாதுகாப்பு படையினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியிருந்த அறிக்கையொன்றில் கூறியிருந்தனர். இந்த கணனித் தொடர்பினை வழங்குமாறு கூறும் அமைச்சரவை தீர்மானமொன்று பல மாதங்களுக்கு முன்னரே அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

எனினும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றில் பணிபுரியும் சில அதிகாரிகளின் இழுபறி காரணமாக இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் நிலவியது. பொலிஸ், சுங்கம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பின் முக்கியத்துவத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த புதன்கிழமை வலியுறுத்தினார். உலகளாவிய பயங்கரவாத சவாலை முறையாக எதிர்கொள்ள இந்த கணனித் தொடர்பு உதவியாக இருந்திருக்கும் என்று பிரதமர் கூறினார்.

மேற்படி மூன்று திணைக்களங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவற்றுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்நிலையில் இன்டர்போலுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதை சில தரப்பினர் விரும்பவில்லை. உலகளாவிய பயங்கரவாதத்தை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தமக்கிடையிலான தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதன் மூலமே பயங்கரவாத தொல்லைக்கு எதிராக நாம் போராட முடியும் என்றும் பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை