இலங்கை கிரிக்கெட் ஆய்வாளர் ஜயசுந்தர மீது ஊழல் குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்திறன் ஆய்வாளர் பதவியிலிருந்து சனத் ஜயசுந்தர அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஐ.சி.சியின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக சனத் ஜயசுந்தர மீது இரண்டு பிரிவுகளில் ஐ.சி.சி குற்றம்சாட்டியுள்ளது.

அதன் விளைவாக உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்திறன் ஆய்வாளர் பதவியிலிருந்து சனத் ஜயசுந்தர தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

வீரர்கள் தேர்வு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு லஞ்சம் வழங்க முயன்றதாக சனத் ஜயசுந்தர மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குள் சனத் ஜயசுந்தர குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க வேண்டும் என ஐ.சி.சி உத்தரவிட்டுள்ளது.

சனத் ஜயசுந்தர 15 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அணியின் கணினி தரவு ஆய்வாளராக செயற்பட்டார்.

முன்னதாக இலங்கையின் முன்னாள் வீரர்களான நுவன் சொய்ஸா மற்றும் அவிஷ்க குணவர்தன ஆகியோர் மீது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

நுவன் சொய்ஸா ஐ.சி.சி ஊழல் தடுப்பு பிரிவின் நான்கு விதிமுறைகளை மீறியதன் அடிப்படையிலும், அவிஷ்க குணவர்தன இரண்டு விதிமுறைகளை மீறியதன் அடிப்படையிலும் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுகின்றனர். அதேநேரம், இந்த இரண்டு வீரர்களின் மீதான ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற டி10 லீக் தொடருக்காகவே சுமத்தப்படடுள்ளது.

எனினும், இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் இருவர் மீதும் டி10 லீக்கில் எந்த சம்பவத்திற்காக ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது என்பது தொடர்பில் எந்த அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை