பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்; எதிர்க்கட்சித் தலைவர் முன்னுக்குப் பின் முரண்

காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் அவசியம்

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு விருப்பமின்றி உள்ளதாலே பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்து வருவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

சர்வதேசத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரிக்க அதிகரிக்க அனைத்து நாடுகளிலும் காலத்துக்கு காலம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனை எதிர்க்கட்சி தலைவர் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.

நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மானியங்களின் பொதியென கூறியிருந்தார். கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில், பாராளுமன்றக் குழுவொன்றை அமைத்து பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை செயற்படுத்த வேண்டுமென கூறினார். அதன் பின்னர் பிதரமருடன் இடம்பெற்ற விவாதத்திலும் குறித்த சட்டம் தொடர்பில் பேச்சுகள் நடத்த தயாரென கூறியிருந்தார். ஆனால் தற்போது சட்டத்தை கொண்டுவர இடமளிக்கமாட்டேன் என்கிறார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக 1979ஆம் ஆண்டுதான் முதலில் நாம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியிருந்தோம். வடக்கு அயர்லாந்தில் இடம்பெற்ற தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக 1974ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஒத்ததாகவே எமது சட்டம் அமைந்தது.

சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்க்க பயங்கரவாதத் தடைச்சட்டம் தற்காலிக தீர்வையே வழங்குகிறது. 2000 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிரந்த பயங்கரவாத ஒழிப்பு சட்டமொன்று கொண்டுவரப்பட்டதுடன், 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் குற்றத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த சட்டமொன்றும் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது. 2005ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் 2006ஆம் ஆண்டு புதிய பயங்கரவாத ஒழிப்பு சட்டமொன்று நிறைவேற்றிக் கொள்ளப்பட்டிருந்தது.

உலகளாவிய ரீதியில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரிக்க அதிகரிக்க அனைத்து நாடுகளிலும் காலத்துக்கு காலம் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை நாட்டு மக்களின் பாதுகாப்புக்கே தவிர தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அல்ல. ஆனால், மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது தரப்பு 1979ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க முடியுமென எண்ணுகின்றது.

மகிந்த ராஜபக்ஷ ஒருபுறத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது பாரிய குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்.

தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்றால், பொலிஸாரும் இராணுவத்தினரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்து சட்டத்தின் முன்ன நிறுத்தவில்லையென கூற முற்படுகிறார். மறுபுறத்தில் சர்வதேச பயங்கரவாத்தை ஒழிப்பதற்கு ஆதரவளிக்க மாட்டோமென்பதையும் அவர் கூறுகிறார். அதன் காரணமாகத்தான் புதிய சட்டங்களையும், உப சட்டங்களையும் கொண்டுவருவதை எதிர்க்கிறார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு மஹிந்ததான் அனுமதியளித்திருந்தார். அடிப்படைவாதத்தை போதிக்கும் பாடசாலைகளுக்கும் அனுமதியளித்திருந்தார். அதற்கு சில காரணங்களும் இருந்தன. சர்வதேச ஆதரவுகள் அவருக்கு கிடைத்திருக்கலாம்.

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்கும் புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முன்னர், மேற்கூறப்பட்ட சில காரணங்களுக்காக அவர் மீது மக்கள் கொண்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை