நாட்டில் முழுமையான அமைதி; அன்றாட வாழ்வு இயல்பு நிலை

அச்சமின்றிப் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புங்கள்

பாடசாலைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்திருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாட்டின் எதிர்கால சந்ததியினரின் கல்விச் செயற்பாட்டை சுமுகமாக முன்னெடுக்க சகல பெற்றோரும் தமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, நாட்டில் தற்போது முழுமையான அமைதி ஏற்பட்டுள்ளதாகவும் மக்களின் அன்றாட வாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த மூன்று தினங்களாக விடுமுறைக் காலமாகவிருந்தபோதிலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்தப் பிரச்சினையும் இன்றிச் சுமுகமான நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் வழமைபோன்று தமது அலுவல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். வெசாக் கொண்டாட்டங்களும் எந்தச் சிக்கலுமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் நடமாட்டமும் அதிகரித்துக் காணப்படுகிறது என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாடசாலைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வருவதாகவும், இராணுவத்தினர் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.

நேற்றையதினம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இராணுவத் தளபதி இதனைச் சுட்டிக்காட்டினார். நாட்டின் பொது மக்களுக்கோ அல்லது நாட்டின் சொத்துக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லையென்றும் அவர் உறுதியளித்தார்.

விசேட அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற துரதிஷ்டவசமான அடிப்படைவாத, பயங்கரவாதத் தாக்குதலினால் இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இச்சம்பவங்களால் நாட்டின் அபிவிருத்திக்கு நேரடியான பங்களிப்புச் செலுத்திவரும் அரசாங்கத் துறையினர் மற்றும் தனியார் துறையினர் வருகை கணிசமாகக் குறைந்ததுடன், அன்றாட செயற்பாடுகளும் முடங்கிப்போயுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும், மக்களின் அன்றாட நடவடிக்கைகளை இயல்புக்குத் திரும்பச் செய்யவும் முப்படையினரும், பொலிஸாரும் அவசியமான சகல இடங்களுக்கும் பாதுகாப்பு வழங்கி வருகின்றோம். பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று குறுகிய காலத்துக்குள் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கும், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கும் தேவையான அதிகாரங்களை இராணுவம் தலைமையிலான முப்படைக்கு, முப்படைகளின் தளபதியென்ற ரீதியில் ஜனாதிபதி வழங்கியுள்ளார். பயங்கரவாத வலையமைப்பில் உள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடுப்பதற்கும் அவர்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளுக்கும் இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இவ்வாறானவர்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகள் சிறந்த பெறுபேறுகளுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பயங்கரவாதிகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கை காரணமாக அரசாங்கத்துறை மற்றும் தனியார் துறையில் உள்ளவர்கள் தமது அன்றாட செயற்பாடுகளுக்குத் திரும்பியிருப்பது மகிழ்ச்சிதரும் விடயமாகும்.

இந்த வருடம் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், அவற்றின் பாதுகாப்பைப் பலப்படுத்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தபோதும், பரவிய வதந்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி பெரும்பலான பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பவில்லை. பாடசாலைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை முப்படையினர் மற்றும் பொலிஸார் முதன்மையான விடயமாகக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். எனவே தேவையற்ற அச்சங்களைத் தவிர்த்து பிள்ளைகளை இன்று (21) பாடசாலைக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் சில பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன.

முப்படையினர் மற்றும் பொலிஸார் பலரைக் கைதுசெய்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி வன்முறைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மீண்டும் இவ்வாறான வன்முறைகள் ஏற்படாமலிருக்க முப்படையினரும், பொலிஸாரும் இணைந்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு வெசாக் கொண்டாட்ட தினங்களில் நாடு முழுவதிலுமுள்ள பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி வெசாக் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டைப் பாதுகாக்கும் இனத்தவர்கள் என்ற ரீதியில் இராணுவத்தினரான நாம் நாட்டிலுள்ள சகல மக்களையும் நாட்டின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.

இராணுவத்தினர் எப்பொழுதும் விழிப்பாக இருப்பதுடன், பாடசாலைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்திருப்பதால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை எவ்வித அச்சமும் இன்றி பாடசாலைகளுக்கு அனுப்பி நாட்டின் எதிர்கால சந்ததியினரைப் பலப்படுத்த முன்வர வேண்டும்.

அத்துடன் பாதுகாப்புத் தரப்பினர் தமது கடமையை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மகேஸ்வரன் பிரசாத், ஸாதிக் ஷிஹான்

 

Tue, 05/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை