ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது

மதரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ்

கிழக்கின் ஷரியா பல்கலைக்கழகத்திற்கான அனுமதியை வழங்காதிருக்கவும் மத்ரஸா கல்வி நிறுவனங்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கிழக்கின் ஷரியா பல்கலைக்கழகம் மற்றும் மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விரிவாக கலந்துரையாடி அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்றுள்ள நிலையில், ஷரியா பல்கலைக்கழகத்திற்கான அனுமதியை வழங்காதிருக்கவும் மத்ரஸா கல்வி நிறுவனங்களை கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை

எடுக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதே வேளை, நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் என்றும் இதனால் எவ்வித தடையுமின்றி பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்குமாறு அனைத்து மாணவர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கின் ஷரியா பல்கலைக்கழகம் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க நேற்று பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார்.

அதனையடுத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க:

ஷரியா பல்கலைக்கழகத்திற்கு நாம் அனுமதி வழங்கப்போவதில்லை. அதற்கான அதிகாரமும் அதற்குக் கிடையாது. பட்டப்படிப்பு நிறுவனமாக மட்டுமே அதனை அனுமதிக்க முடியும். இனியும் இதனை ஷரியா பல்கலைக்கழகமாக நடத்திச் செல்ல முடியாது என சட்ட ரீதியாக வெளிப்படுத்த முடியும். இதற்கென பல்கலைக்கழக சட்டத்தில் 09(அ) பிரிவு திருத்தத்திற்குள்ளாக்கப்படும். பங்களாதேஷின் சட்டத்திற்கமைய அவர்கள் அதனை தனியார் பல்கலைக்கழகமாகவே அறிமுகப்படுத்துகின்றனர். மதம், குலம் எனப் பார்க்காது ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு அந்த சட்டத்தின் ஐந்தாவது சரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிணங்க இது தொடர்பில் நிர்வாக சபை மற்றும் அதற்கான தகைமை அங்கு இடம்பெறும் செயற்பாடுகள் தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

அதேவேளை, இது தொடர்பில் பாராளுமன்றத்தின் ஆலோசனை கவனத்திற்கொள்ளப்படும்.

இதனைத் தவிர மத்ரஸா கல்வி நிறுவனம் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் சில செயற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சும் முஸ்லிம் விவகார அமைச்சும் இணைந்து செயற்படும். இந்த இரண்டு விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனைகளை முன்வைத்துள்ளனர். அது தொடர்பில் நாம் பேச்சுவார்த்தை நடத்தி அதனை நாம் அனுமதித்துள்ளோம். இதற்கிணங்க அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Tue, 05/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை