அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி நம்பிக்ைகயில்லா பிரேரணை

இன்று சபாநாயகரிடம் கையளிப்பு

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று (21) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தடுப்பதற்கும், நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கும் தவறியமை மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இனரீதியான வன்முறைகளைத் தடுக்கத் தவறியமை போன்ற காரணங்களை முன்வைத்தே

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஜே.வி.பி கையளிக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர் அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடவிருப்பதாகவும், தமது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டிருப்பதால், அதற்கு முன்னுரிமை அளிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

பயங்கரவாதிகளால் தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனப் புலனாய்வுப் பிரிவினரும், சர்வதேச புலனாய்வாளர்களும் எச்சரித்திருந்தபோதும் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சியாளர்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று 21 நாட்களின் பின்னர் குறித்த இனத்தவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வன்முறைகளைத் தடுப்பதற்கும் ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். இந்தச் சம்பவங்கள் நடந்தேறும்போது நாட்டின் பிரதான ஆட்சியாளர் நாட்டிலேயே இல்லை. இவ்வாறான நிலையில் தற்பொழுது நாட்டை ஆட்சி செய்பவர்களுக்குத் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்குத் தார்மீக உரிமை இல்லை. எனவேதான் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாளை (இன்று) சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளோம்.

நாட்டில் குழப்பம் ஏற்பட்டிருந்த சூழலில் நாம் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர முயற்சிக்கவில்லை. குழப்பத்தைச் சரிசெய்வதற்கே முயற்சித்தோம். எனினும், நாட்டிலுள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் சிறிதளவும் அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லையென்பதால் எந்தவொரு நேரத்திலும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். எனவே, தற்பொழுது இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எனினும், இதனைச் செய்வதாயின் தேர்தலொன்றின் ஊடாகவே மக்களுக்கு அனுமதி கிடைக்கும். இருந்தபோதும் பாராளுமன்றத்தில் இதனை சாத்தியப்படுத்தலாம். பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியும்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத ஆட்சியாளர்கள் உள்ளனர். ஜனாதிபதி ஒரு கருத்தையும், பிரதமர் வேறொரு கருத்தையும், அமைச்சரவையில் உள்ளவர்கள் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களையும் கூறி வருகின்றனர். குழப்பத்தின் பின்னராவது ஒரேயிடத்திலிருந்து ஆட்சிசெய்ய முடியாத ஆட்சியாளர்கள். அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏனைய அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

குற்றமிழைத்தவர்கள், மோசடிக்காரர்கள் மற்றும் உயிர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களைப் பாதுகாப்பதற்கு ஜே.வி.பி முன்னிற்காது. கடந்த காலத்திலும் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம்.

எனவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது அது பற்றி முடிவெடுப்போம் எனவும் ஜே.வி.பியின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Tue, 05/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை