அசம்பாவிதங்களின் பின்னணியில் வெளிச் சக்திகளின் செயற்பாடுகள்

அருட்தந்தை

எட்மன்ட் திலகரட்ண

நாட்டில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் அசம்பாவிதங்களின் பின்னணியில் வெளிச் சக்தியொன்று செயற்படுவதாக பேராயர் இல்ல ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை எட்மன்ட் திலகரட்ண நேற்று தெரிவித்தார். நடக்கும் சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால் இவை தற்கொலை குண்டுத் தாக்குதலால்

பாதிக்கப்பட்டு வேதனைக்குள்ளான மக்களால் முன்னெடுக்கப்படுவதாக எமக்குத் தெரியவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

வேதனைக்குள்ளான மக்கள் சுமார் மூன்று வாரங்களுக்குப் பின்னர் இதுபோன்ற அசம்பாவிதங்களை முன்னெடுப்பதற்கு வாய்ப்பில்லையெனச் சுட்டிக்காட்டிய பேராயர் இல்ல ஊடகப் பேச்சாளர், ஏப்ரல் 21 ஆம் திகதி சம்பவத்தை காரணமாக கொண்டு இனங்களிடையே மோதலை ஏற்படுத்தி வேறு சிலர் தமது தேவைகளை நிறைவு செய்ய முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

"குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாக சொல்வார்கள் ஆனால் இங்கே சிலர் குழம்பிய குட்டையில் கப்பலையே செலுத்துவதுடன், தங்கள் சுய இலாபத்துக்காக இனங்களுக்கிடையே முரண்பாட்டையே தோற்றுவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் போன்ற அனர்த்தங்களை ஊடகங்கள் எவ்வாறு பொறுப்புடன் அறிக்கையிட வேண்டுமென்பது தொடர்பிலான கருத்தரங்கு நேற்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், செபஸ்தியன் மற்றும் அந்தோனியார் தேவாலயங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. கடந்த 21 ஆம் திகதி நான் பிட்டிபனையில் இருந்தேன். உறவினர் ஒருவரின் தொலைபேசி அழைப்பையடுத்தே நான் தேவாலயத்தில் குண்டு வெடித்த சம்பவத்தை அறிந்தேன். நான் இருந்த இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தேவாலயத்துக்கு நேரில் வந்து பார்த்தேன்...... (வார்த்தைகள் வெளிவராமல் சற்று நேரம் மெளனமானார்)

அங்கு அனைத்தும் சிதைவுற்று இருந்ததைக் கண்டேன் (கண்களில் கண்ணீர் வழிந்தோட.. அதனை அடக்க முற்பட்டபடி தனது பேச்சைத் தொடர்ந்தார்.)

யாரோ ஒரு சிலர் செய்த குற்றச்சாட்டுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குறை கூற வேண்டாமென 21 ஆம் திகதியன்றே பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அனைத்து கிறிஸ்தவர்களையும் கேட்டுக் கொண்டார். அதனையடுத்து நாட்டில் எவ்வித பிரச்சினையுமின்றி அனைத்து சம்பவங்களும் சுமுகமாக முன்னெடுக்கப்பட்டன.

லக்ஷ்மி பரசுராமன்

Thu, 05/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை