முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணி சம்பியன்

அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் இடையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணி வென்ற பலநாடுகள் பங்கேற்ற முதல் சம்பியன் பட்டம் இதுவாகும்.

இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் தகுதி பெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு டப்ளினில் நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் முதலில் ஆடிய நிலையில் 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. (ஷேய் ஹோப் 74, அம்ப்ரீஸ் 69 ஓட்டங்களை விளாசியிருந்தனர்.)

இதையடுத்து பங்களாதேஷ் அணிக்கு 24 ஓவர்களில் 210 ஓட்டங்கள் வெற்றி இலக்காக டக்வொர்த் லுவிஸ் முறையில் நிர்ணயிக்கப்பட்டது.

பங்களாதேஷ் அணி 22.5 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. செளமிய சர்க்கார் 66, மொஸாடேக் ஹுசைன் 52, முஷ்பிகுர் 36 ஓட்டங்களை சேர்த்தனர். மேற்கிந்திய தீவுகள் சார்பில் கேப்ரியேல், ரெய்பர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக மொஸாடேக் ஹுசைன் தேர்வு செய்யப்பட்டார்.

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை