நைகரில் எரிபொருள் லொரி வெடித்து 58 பேர் உயிரிழப்பு

நைகர் தலைநகர் நியாமே விமான நிலையத்திற்கு அருகில் எரிபொருள் நிரப்பிய லொரி ஒன்று கவிழ்ந்து வெடித்ததில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் தண்டவாளத்திற்கு அருகில் நிறுத்துவதற்கு முயன்றபோதே அந்த லொரி கவிழ்ந்துள்ளது.

இதில் கொட்டிய எரிபொருளை சேகரிக்க வந்த பலரே உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிறு இரவு இடம்பெற்றிருக்கும் இந்த வெடிப்பில் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற ஜனாதிபதி மஹமது இஸ்ஸுபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களையும் சந்தித்தார்.

“நல்லிரவுக்கு சற்று முன்னர் லொரி ஒன்று கவிழ்ந்தது. எரிவாயுவை பெறுவதற்கு எல்லா இடங்களில் இருந்தும் மக்கள் வந்தனர். அதனை அடுத்து ஒரு பக்கமாக தீ ஏற்பட்டு எல்லா பக்கங்களிலும் பரவியது” என்று சம்பவத்தை பார்த்த ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இந்த வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று செய்தி நிறுவனத்திற்கு உள்துறை அமைச்சர் முஹமது புசும் குறிப்பிட்டார்.

எண்ணெய் உற்பத்தி நாடான நைஜீரியாவை அண்டை நாடாகக் கொண்ட நைகரில் எரிபொருள் நிரப்பிய லொரிகளில் தீ பரவுவது வழக்கமான சம்பவமாக உள்ளது.

2012 இல் தெற்கு நைகரில் ஏற்பட்ட இவ்வாறான வெடிப்பொன்றில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை