3000 உதவி ஆசிரியர்களை நியமிக்க விரைவில் அமைச்சரவை பத்திரம்

'மலையக சமூகத்தை பற்றி சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்'

மலையக அரசியலில் கல்விசார் சமூகத்தின் வகிபாகம் தொடர்பில் நாம் மீளவும் சிந்தித்து பார்க்க வேண்டியவர்களாக, செயற்பாட்டு வடிவங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். அதற்கான அரசியல் களம் இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கிறோம்.

மூவாயிரம் உதவி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரிலேயே இந்த ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

மலையக சமூகம் எங்கே இருக்கிறது எனும் நிலையிலிருந்து அல்லாமல் எங்கே வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற நிலையில் இருந்து நமது சிந்தனைகள், செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்தார்.

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட தலவாக்கலை - அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் சனிக்கிழமை (25) லிந்துலையில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மலையகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாக கொண்ட தொழிற்சங்க அரசியல் கட்டமைப்புக்கு நூற்றாண்டு கால வரலாறுண்டு. எனினும் அந்த வரலாறு இயல்பான போக்கில் ஒரு மாற்றத்தை நோக்கி நகர்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து கொண்டு செல்லும்போது அது சார்ந்த அரசியல் சொல்நெறியும் மாற்றமடைந்து செல்வதை தவிர்க்க முடியாது. ஆனால் அந்த மாற்றத்தை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.

மலையக சமூகத்தில் இன்று ஆசிரிய சமூகத்தின் பரிமாணம் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த அதிகரிப்பு அரசியலிலும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தமது தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வது பற்றி எம்முடன் உரையாடி வருகின்றனர். அவற்றுக்கான தீர்வு நோக்கிய நகர்வுகளில் நாம் ஒன்றிணைந்து செயற்படுதல் வேண்டும். மலையக ஆசிரிய தொழில் படை விரைவில் மேலும் அதிகரிக்கப்படவுள்ளது. தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால், அரசாங்க பாடசாலைகளில் இரண்டாம் மொழி ( தமிழ்,சிங்களம்) கற்பிப்பதற்கான தகைமை கொண்ட மற்றும் ஆர்வமுடையவர்களிடம் உரிய கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கு தகைமை உடைய இளைஞர் யுவதிகளை ஊக்கப்படுத்தும் பொறுப்பு ஆசிரிய சமூகத்துக்கு உண்டு.

ஏற்கனவே நியமனம் பெற்ற ஆசிரிய உதவியாளர்களை பயிற்சியின் பின்னர் உரிய சேவையில் இணைத்துக்கொள்வது மற்றும் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பான தீர்மானம் ஏப்ரல் மாதம் எடுக்கப்படவிருந்த நிலையில் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சற்றே தாதமதமாகியுள்ளது. விரைவில் அவர்களுக்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தலவாக்கலை குறூப் நிருபர்

Mon, 05/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை