எவரெஸ்டில் 23ஆவது முறை ஏறி நேபாள நாட்டவர் புதிய சாதனை

உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 23ஆவது முறையாக ஏறி 49 வயதான நேபாள நாட்டவர் கமி ரிதா ஷெர்பா உலக சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே 22 முறை ஏறி ஷெர்பா உலக சாதனை படைத்திருந்த நிலையில் தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.

8,850 மீற்றர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரம் சிகரத்தில் மலையேற்றத்துக்கு இரு பாதைகள் உள்ளன. ஒன்று, நேபாளம் வழியாகச் செல்வது, மற்றொன்று திபெத் வழியாகச் செல்வது.

இந்நிலையில், நேபாள நாட்டின் சோளுகும்பு மாவட்டத்தில் உள்ள தாமே கிராமத்தைச் சேர்ந்த 49 வயது கிமி ரிதா ஷெர்பா என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் 8 பேர் கொண்ட குழுவுடன் ஏறினார். ஏற்கனவே 22 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி அதிகமானமுறை சிகரத்தில் ஏறிய வீரர் எனும் உலக சாதனை படைத்திருந்த நிலையில் மீண்டும் நேபாள வழியாக ஏறி முயற்சித்தார்.

இதில் வெற்றி அடைந்த ஷெர்பா நேற்று முன்தினம் மாலை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து 23ஆவது முறையாக சிகரத்தில் ஏறிய வீரர் எனும் உலக சாதனையை படைத்தார்.

கடந்த 1994ஆம் ஆண்டில் இருந்து ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறார். கடந்த 1995ஆம் ஆண்டில் இவர் உடல்நிலை சரியில்லாததால் சிகரத்தில் ஏறவில்லை.

2017ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் 21 முறை ஏறிய வீரர்களான அபா ஷெர்பா, புர்பா தஷி ஷெர்பா ஆகியோரோடு ரிதா ஷெர்பாவும் இணைந்தார். அவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற நிலையில், இப்போது 23ஆவது முறையாக ரிதா ஷெர்பா சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார்.

Thu, 05/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை