கத்தோலிக்க பாடசாலைகள் 14 ஆம் திகதி முதல் ஆரம்பம்

முதல் ஞாயிறு திருப்பலி

நாட்டிலுள்ள கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கவுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த கத்தோலிக்க ஆலயங்களின் திருப்பலி பூசைகளை எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை உறுதிப்படுத்தப் பட்டுள்ள நிலையிலேயே கத்தோலிக்க பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், எவ்வாறெனினும் பாதுகாப்பற்ற அல்லது அச்சுறுத்தல் நிலை தொடருமாயின் கத்தோலிக்கப் பாடசாலைகளை வெசாக் பண்டிகையின் பின்னரே திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு கத்தோலிக்க ஆயர் பேரவையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றின்போதே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பேராயர்,

எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலயங்களில் திருப்பலிப் பூசைகளை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்தும் வகையில் படையினரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

காலி மறைமாவட்டத்தில் கடந்த 5ஆம் திகதி முதல் ஆலயங்களில் திருப்பலிப் பூசை நிறைவேற்றப்பட்ட நிலையில் நாட்டின் ஏனைய மறை மாவட்டங்களில் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு திருப்பலிப் பூசைகள் இதுவரை நடத்தப்படவில்லை. காலி ஆயர் ரேமன் விக்கிரமசிங்க ஆண்டகை அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை உறுதிப்படுத்தியதையடுத்தே காலியில் ஆலயங்கள் திறக்கப்பட்டன.

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியானோருக்காக நேற்று முன்தினம் 9ஆம் திகதி அந்த ஆலயத்தில் முதற் தடவையாக நினைவுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஆலயத்தின் வெளிப்புறத்திலேயே எனது தலைமையில் அந்த பூசை நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்கான அஞ்சலி திருப்பலி நாளை 11ஆம் திகதி 10 மணிக்கு நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த நினைவஞ்சலி திருப்பலி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் ஆலயத்திலேயே ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் மேற்படி குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கத்தோலிக்க திருச்சபையினால் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளது. நேற்றைய இந்த ஊடக மாநாட்டில் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் வின்ஸ்டன் பெர்னாண்டோ ஆண்டகை, அதன் செயலாளர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை உட்பட நாட்டின் அனைத்து மறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை