ஒருங்கிணைந்த பொறுப்புக் கூறலை அரசினால் எவ்வாறு வைக்க முடியும் ?

உதிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரியாகக் கூற முடியாத அரசாங்கத்தினால் எவ்வாறு ஒருங்கிணைந்த பொறுப்புக் கூறலை முன்வைக்க முடியும் என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பினார்.

விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தற்போதிருக்கின்ற சட்டங்களை வைத்து, மேற்படி பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என ஒரு சிலர் கூறுகின்றபோது, இல்லை இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதாது என இன்னுமொரு தரப்பினர் பகிரங்கமாகக் கூறுகின்றபோது, மேலும் தாக்குதல்கள் விரைவில் நடத்தப்படக்கூடும் என ஆளுந்தரப்பினரே பகிரங்கமாகக் கூறுகின்றபோது, வெளிநாட்டவர்கள் இந்த நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கோ அல்லது, உல்லாசப் பயணிகளாக வருவதற்கோ விரும்புவார்களா? என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்.

அதேநேரம், மேற்படித் தாக்குதலையடுத்து, வெளிநாட்டுக் கடன்களை மேலும் எதிர்பார்த்தும், கடன்களில் சலுகைகளை எதிர்பார்த்தும் மகிழ்ந்து கொண்டிருக்கின்ற தரப்பினரும் இல்லாமல் இல்லை.

நாடும், நாட்டு மக்களும் எக்கேடு கெட்டுப் போனாலும், மேலும், மேலும் கடன்களை வாங்கி இப்படியே காலத்தை ஓட்டிவிடுவோம் என நீங்கள் நினைக்கிறீர்கள்.

அது, எதிர்காலத்தில் இந்த நாட்டுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தப் போகின்றது என்பது குறித்து எவருக்கும் கவலையில்லை என்றே தெரிய வருகின்றது. எனவே, முதலில் இந்த நாட்டின் இயல்பு நிலையை ஏற்படுத்தங்கள். வாயால் அல்லாது செய்கையினால் அதனை நிறைவேற்றுங்கள். பொருளாதார நிலைமைகள் தொடர்பில் அர்ப்பணிப்புடன் அவதானங்களை செலுத்துங்கள்.

இதற்கெல்லாம் முன்னதாக, பிளவுபட்ட அரசாங்க செயற்பாடுகளைக் கொண்டிருக்காமல், ஒன்றிணைந்த அரசாங்கத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு, நாட்டு மக்களின் நலன்கருதியும், தேசிய பாதுகாப்பு கருதியும் உழைக்க முன்வாருங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, நாட்டில் முஸ்லிம் மக்களது வர்த்தக நடவடிக்கைகளை முடக்குகின்ற வகையிலான சில கைங்கரியங்கள் சில தீய சக்திகளின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய ஏற்பாடுகளின் பின்னணிகள் கண்டறியப்பட்டு, அவை ஒழிக்கப்பட வேண்டியத் தேவையும் இந்த அரசுக்கு இருக்கின்றது என்பதையும்; இங்கு வலியுறுத்துவதுடன், வெளிநாட்டு அகதிகள் சிலரை வவுனியா மாவட்டத்தில் குடியேற்றுவது தொடர்பிலும் தற்போது கதைக்கப்பட்டு வருகின்றது. அதற்கு முன்பதாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குறிப்பாக மீள்குடியேறியுள்ள மக்களுக்கான காணிகள் உரிய முறையில் பகிரப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை