எவரெஸ்ட் மலையேறிகளின் உயிரிழப்பு 11 ஆக உயர்வு

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே இறங்கும்போது அமெரிக்க மலையேறி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

இதன்மூலம் இந்தப் பருவத்தில் எவரெஸ்ட் மலையேறுவதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. உலகின் உயரமான மலையின் உச்சியில் ஏற்பட்டிருக்கும் நெரிசலும் உயிரிழப்புக்குக் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

மலையின் 8,848 மீற்றர் (29,029 அடி) உச்சியை ஏற்கனவே அடைந்த 61 வயதான கிறிஸ்டோபர் ஜோன் குலிஷ் என்ற அமெரிக்க நாட்டவர் கடந்த திங்கட்கிழமை மாலை மலை உச்சிக்குக் கீழுள்ள முகாம் ஒன்றுக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார்.

“திடீரென்று அவருக்கு இதயப் பிரச்சினை ஏற்பட்டு தெற்கு முகட்டுக்கு அப்பால் அவர் உயிரிழற்தார் என்று அவரது பயண ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்” என நேபாள சுற்றுலா திணைக்களத்தின் மீரா ஆசர்யா குறிப்பிட்டார்.

இந்த பருவத்தில் எவரெஸ்ட் சிகரத்தை தொடுவதற்கு சாதனை எண்ணிக்கையாக 381 பேருக்கு நேபாளம் அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது. இதனால் மலைச் சிகரத்திற்கு அருகில் உள்ள ஆபத்தான ‘மரண வலய’ பகுதியில் ஒட்சிசன் தீரும் நிலையிலும் பயணச் சேர்வு ஆபத்துடனும் பல குழுக்களும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

மலையில் நீளமான வரிசையில் காத்திருப்போரின் புகைப்படத்தை ஏ.எப்.பி செய்தி நிறுவனம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.

சோர்வும், உடல் தளர்ச்சியும் பெரும்பாலான மரணங்களுக்குக் காரணம் என்றும் அதிகாரிகள் கூறினர்.

இதற்கு முன் கடந்த 2015இல் 10 பேர் வரை உயிரிழந்தனர். அதுவும் அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமானது.

எவரெஸ்ட் மலையேற்றத்தில் முதல் உயிரிழப்பு பதிவான 1922 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான சடலங்கள் அந்த சிகரத்தின் பனி அல்லது பனிப்பாறைகளில் புதைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை