விலங்கினங்களை வேட்டையாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் விலங்கினங்கள் மற்றும்  பறவைகளை வேட்டையாடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச பொலிஸ் நிலையங்களூடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கடும் வரட்சியான காலநிலை நிலவுகின்ற நிலையில், எல்லைப்புறக் கிராமங்களிலுள்ள காட்டு விலங்குகள் மற்றும்  பறவைகள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள நீர் நிலைகளில் நீர் அருந்த வருகின்றன. இவ்வாறு வரும் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளை சிலர் வேட்டையாடி வருகின்றனர்.

குறிப்பாக மான், மரை, காட்டுப்பன்றி, கொக்கு, நாரை, காட்டுக்கோழி போன்றவற்றை இறைச்சிக்காக வேட்டையாடுகின்றனர்.

மட்டக்களப்பின் வாகரை, கிரான், வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளியிலும் அம்பாறையில் நாவிதன்வெளி, சம்மாந்துறை, பொத்துவிலிலும் இவ்வாறு பறவைகளும் விலங்கினங்களும் வேட்டையாடப்படுகின்றன.

கடந்த சில தினங்களாக சட்டவிரோதமாக  பறவைகளை வேட்டையாடிய சிலரை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். இவ்வாறான நிலையிலேயே, நீர் நிலைகளில்  நீர் அருந்தவரும் விலங்கினங்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

(துஜியந்தன் துஜி -பாண்டிருப்பு தினகரன் நிருபர்)

Wed, 04/10/2019 - 16:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை