மின்சாரத் தடைக்கான உண்மைக் காரணத்தை வெளியிட வேண்டும்

அதிகாரிகளை நீதிமன்றம் அழைத்தது ஏன்?

நாட்டில் நிலவும் வரட்சியால் மின்சாரத்தடை ஏற்பட்டிருந்தால் மின்சாரசபையின் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் ஏன் அழைப்பாணை விடுக்க வேண்டும் என ஜே.வி.பி கேள்வியெழுப்பியுள்ளது.

இலங்கை மின்சாரசபையிடம் மின்னுற்பத்தி தொடர்பில் நீண்டகாலத் திட்டமொன்று இல்லாமையே நாடு மின்சாரத் தடையை எதிர்கொள்வதற்குப் பிரதான காரணம் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றஞ்சாட்டினார்.

2019ஆம் ஆண்டில் நாடு மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுக்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே முற்கூட்டியே அதற்கான மாற்றுத் திட்டத்தை தயாரிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபையைக் கேட்டுக் கொண்டிருந்தது. எனினும், மின்சாரசபை எந்தத் திட்டத்தையும் தயாரிக்கவில்லை. இவ்வாறான நிலையிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, தற்பொழுது மின்சாரசபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுனில் ஹந்துன்நெத்தி இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடைக்கு 250 மெகா வோட்ஸ் மின்சாரத் தட்டுப்பாடே காரணமாகும். இந்த மின்சாரத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது அல்லது எவ்வாறு அதனை உருவாக்குவது என்பது குறித்து மின்சார சபையிடம் திட்டமொன்று இருந்திருக்க வேண்டும். எனினும், அவர்கள் எந்தவித திட்டத்தையும் தயாரிக்காது தமக்கு நெருக்கமான தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரத்தை அதிக விலையில் கொள்வனவு செய்கின்றனர். இவ்வாறு மின்சாரம் கொள்வனவு செய்யப்படும்போது பெருந்தொகையான தரகுப் பணம் மின்சார சபையின் அதிகாரிகளுக்குச் செல்கிறது என்றும் சுனில் ஹந்துன்நெத்தி குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறான நிலையில் சுயாதீன ஆணைக்குழுவான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சாரசபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருப்பதைப் பாராட்டுவதாகவும், நாட்டில் மின்சாரத் தடை ஏற்படுவதற்கான உண்மைக் காரணம் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை