வரவு -செலவுத் திட்டத்தை நிறைவேற்ற அரசிடம் பெரும்பான்மை

வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான பெரும்பான்மை அரசாங்கத்திடம் உள்ளதென கல்வியமைச்சரும் ஐ.தே.க பொதுச் செயலாளருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், வரவு செலவுத் திட்ட இறுதி வாக்களிப்பில் எந்தப் பிரச்சினையும் கிடையாதென்றும் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பிலும் அரசாங்கம் பெரும் வெற்றியைப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சியில் தற்போது பெரும் பிரச்சினைகள் நிலவுவதாகவும் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும் என்ற நிலையில் அவர்கள் இருந்ததாகவும் எனினும் இரண்டாவது வாக்கெடுப்பு மீதான வாசிப்பு அவர்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக வெற்றிபெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இறுதி வாக்கெடுப்பிலும் அரசாங்கம் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ள அவர், எதிர்க் கட்சியினர் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமுகமளிக்கமாட்டார்களென்றும் அவர்கள் மறைந்திருந்து திடீரென சபையில் பிரவேசித்து மாகாண சபைகள் தொடர்பான நிதியொதுக்கீட்டு விவகாரத்தை தோற்கடித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகளவிலான உள்ளூராட்சி சபைகள் எதிர்க்கட்சியினர் வசமேயுள்ளதால் அவ்வாறு அவர்கள் செயற்பட்டாலும் அது அவர்களுக்கே பிரச்சினையாகும் என தெரிவித்துள்ள அமைச்சர் எதிர்க்கட்சிகளின் எத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும் அரசாங்கம் வெற்றிபெறுவது உறுதியென்றும் எதிர்வரும் 10 வருடங்களுக்கு ஐ.தே.கட்சியே ஆட்சியிலிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை