பொறுப்புக் கூறலில் இன்னும் முன்னேற்றமில்லை

வெளிநாட்டு நீதிபதிகளை வெறுக்கும் அரசு உள்ளக விசாரணையை துரிதப்படுத்தாதது ஏன்?

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும் பொறுப்புக் கூறல் தொடர்பில் முன்னேற்றம் எதனையும் காணவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.

வெளிநாட்டு நீதிபதிகளையோ கலப்பு நீதிமன்றத்தையோ அனுமதிக்கப்போவதில்லை என்று கூறும் அரசாங்கம் உள்ளக விசாரணையூடாக என்ன செய்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு மற்றும் சுற்றாடல்,மகாவலி அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி உண்மையில் முயற்சிப்பதாக இருந்தால் பொறுப்புக் கூறல் மற்றும் காணி விடுவிப்புகள் என்பன தொடர்பாக அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பாதுகாப்பு அமைச்சிற்காக இந்த வருடத்தில் கூடுதல் தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும் தொடர்ந்தும் பாதுகாப்பிற்கு அதிக தொகை ஒதுக்கப்படுகின்றது.

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளோம். யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் காணிகளில் பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இன்னும் விடுவிக்கப்படாது காணிகள் இருக்கின்றன.

இதில் கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில், நீண்ட காலமாக மக்கள் போராடி வருகின்றனர். தேசிய பாதுகாப்புக்கு அவசியமில்லாத இடங்களிலும் இராணுவத்தினர் மக்களின் காணிகளை வைத்திருக்கின்றனர். அனைத்து தனியார் காணிகளும் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்படுமென 2015 இல் ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார்.

அவர் வாக்களித்தது போன்று மீண்டும் அந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும் பொறுப்பு கூறல் விடயத்தில் இன்னும் முன்னேற்றங்களை காணவில்லை. இதனால் வெளிநாட்டு நீதிபதிகளை இங்கு அழைத்து வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில் உள்ளக பொறிமுறையின் கீழ் எதனை செய்துள்ளீர்கள் .

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம் இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் 3022 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ஒரு விசாரணையேனும் நடைபெற்றுள்ளதா? உள்நாட்டு விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை