புட்டினுடனான சந்திப்புக்கு ரஷ்யா பயணமானார் கிம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்புக்காக வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் ரஷ்யாவின் தூரக் கிழக்கு நகரை நேற்று அடைந்தார்.

ரஷ்யா ஜனாதிபதியுடன் தனது முதல் பேச்சுவார்த்தைக்காகவே ரயில் மூலம் பசிபிக் துறைமுக நகரான வ்ளாடிவொஸ்ட்கை கிம் அடைந்துள்ளார். சம்பிரதாயமான முறையில் ரொட்டி மற்றும் உப்பு வழங்கப்பட்டு அதிகாரிகளால் அவர் வரவேற்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ரயில்நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு இல்லத்தை கிம் பார்வையிட்டார்.

இந்த இல்லம் முன்னாள் வட கொரிய தலைவர், கிம் ஜொங் உன்னின் தாத்தாவின் ரஷ்ய பயணத்தின் நினைவாக கட்டப்பட்டதாகும்.

கொரிய தீபகற்பத்தின் அணு சக்தி பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ரஷ்யா குறிப்பிட்டபோதும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தை முறிந்திருக்கும் நிலையில் கிம் இந்த சந்திப்பில் ரஷ்யாவிடம் ஆதரவு கோரும் என்று அவதானிகள் நம்புகின்றனர்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் வியட்நாமில் கிம் மற்றும் டிரம்ப் சந்தித்து வட கொரிய அணு ஆயுத திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தயபோதும் இரு தலைவர்களுக்கும் இடையிலான அந்த இரண்டாவது சந்திப்பு உடன்பாடு இன்றி முடிந்தது.

வட கொரியா சக்திவாய்ந்த கூட்டணி ஒன்றை எதிர்பார்ப்பதாகவே இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.

முன்னதாக வட கொரியா எல்லையை கடந்து ரஷ்யாவுக்குள் கிம் ஜொங் உன்னின் ரெயில் நுழைந்தபோது க்ஹஸான் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “இந்த பயணம் பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும் அமையும் என்று நான் நம்புகிறேன். கொரியா தீபகற்பத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் ரஷ்ய–வட கொரியா இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக புடினுடன் நான் விரிவாக ஆலோசனை நடத்துவேன்” என குறிப்பிட்டார்.

Thu, 04/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை