நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறுசீரமைப்புக்கு உள்ளாக வேண்டும்

பாரிய நெருக்கடிக்கு மத்தியிலும் கல்விக்கு அதிகளவு நிதி 

தெற்காசியாவில் நவீன கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும் நாடாக இலங்கையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடிகள் காணப்பட்ட போதும் கல்விக்காக அதிகளவான  நிதியை செலவழித்து கல்வித்துறையை பாரியளவு மாற்றத்துக்குள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மிலாகிரிய சென். பாவுல் மகளிர் கல்லூரியின் பிரதான கட்டடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு எரையாற்றும் போதே பிரதமர்  நேற்று முன்தினம் (3) இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், 13வருட கல்வியை கட்டாயப்படுத்தியதன் ஊடாக கரும்பலகையை பயன்படுத்தி கல்வியை கற்ற யுகம் இன்று வயிட் போர்ட், ஸ்மார்ட் வகுப்பறை வரை வளர்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்நாட்டு மாணவர்களுக்கு நவீன அறிவின் ஊடாக முன்னோக்கிச் சென்று உலகை வெல்லும் வழியை திறந்து விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து இன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. அந்த தொழில்நுட்பமானது இன்று எமது கல்வி முறையிலும் இணைக்கப்பட்டுள்ளது. அன்று அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து கல்வி பரவியதைப் போன்று இன்று நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக கல்வி முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இன்று முழுமையாக உலகம் மாற்றம் அடைந்துள்ளது. இதனடிப்படையில் இன்று புது யுகமொன்றில் அடியெடுத்து வைத்துள்ளோம். அதன் மூலம் கல்வியை கற்றுக் கொள்ள முடியும். உலகமானது இன்று ஸ்மார்ட் தொழில்நுட்ப யுகத்திற்கு மாற்றமடைந்துள்ளது. இந்த யுகமும் இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் மாற்றமடைந்து வேறு யுகமொன்று உருவாகும். 

இலங்கையையும் ஸ்மார்ட் கல்வி முறைக்கு இட்டுச் செல்ல வேண்டும். அதனடிப்படையில் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறையை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்தோம்.இன்று அது பல பாடசாலைகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் முதலாவது ஸ்மார்ட் கல்லூரியை குருநாகலில் ஆரம்பித்தோம். ஆசிரியர்களுக்கு இது தொடர்பான பயிற்சிகளை அதிகமாக வழங்க வேண்டும். ஏனைய பாடசாலைகளிலும் இதனை எதிர்வரும் காலங்களில் ஆரம்பிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். கல்வியியல் கல்லூரிகளின் பயிற்றுவிக்கப்பட்ட 10,000ஆசியர்களை இவ்வருடத்தினுள் கல்விக் கட்டமைப்பினுள் உள்வாங்க உள்ளோம். பாடசாலை ஆசிரியர்களை போலவே அதிபர்களுக்கும் நவீன அறிவை பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. எமது பாடசாலைகளின் அதிபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அந்நாடுகளின் கல்வி முறையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் தொடர்பில் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியுள்ளது என்றார். 

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மின்சக்தி, எரிசக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க,பாடசாலை அதிபர் சுமேதா ஜயவீர ஆகியோருடன் அரச அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Fri, 04/05/2019 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை