விருது வென்ற நவீட் நவாஸ் டி. எஸ். சேனநாயக்க கல்லூரி மாணவர்

1993 இல் ஒப்சேர்வர்- சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் விருதை வென்றவர் நவீட் நவாஸ். கொழும்பு டீ. எஸ். சேனநாயக்க கல்லூரியில் இருந்து இந்த விருதை வென்றவர் இவர் ஒருவரே ஆவார்.

டீ. எஸ். சேனநாயக்க கல்லூரியில் நவீட் நவாஸ் கிரிக்கெட் விளையாடிய போதே அவரது பெயர் அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதிரடி துடுப்பாட்டம் மற்றும் அதிக ஓட்டங்கள் என்று வரும் சந்தர்ப்பங்களில் நவீட் நவாஸின் பெயரும் சேர்ந்து வரும். பாடசாலையில் இருந்து விலகிய பின்னரும் அவரது துடுப்பாட்ட வேகம் குறையவில்லை. ஆனால் ஒரே ஒரு மாற்றம் டீ. எஸ். சேனநாயக்க என்ற பாடசாலை பெயர் இருந்த இடம் என். சி. சி. என்று மாறியிருந்தது.

99 என்ற அதிகளவிலான சராசரியை அவர் விளையாடிய ஒரே டெஸ்ட் போட்டியில் நவீட் நவாஸ் பெற்றிருந்த போதும் அவரது சர்வதேச கிரிக்கெட் குறைந்தளவு போட்டிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2002 ஜுலை 28ஆம் திகதி இலங்கை விளையாடிய டெஸ்ட் போட்டியில் நவீட் நவாஸ் டெஸ்ட் அறிமுகம் பெற்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக நவீட் நவாஸ் விளையாடிய ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகவும் அது அமைந்துவிட்டது. அறிமுக டெஸ்ட் போட்டியில் 21 மற்றும் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களை பெற்றபோதும் நவீட் நவாஸ் இலங்கை ஏ அணிக்கு கீழிறக்கப்பட்டமை கவலைக்குரியது.

எனினும் 2002 இல் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடருக்கு நவீட் மீண்டும் அழைக்கப்பட்டார். எனினும் அதற்கு முன் 1997/1998 பருவகாலத்தில் அவர் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தார்.

1997/98 பருவகாலத்தில் அவர் சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3ஆம் நிலையில் களமிறங்கிய போதும் 23 பந்துகளில் அவர் 5 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை பெரிதும் பாதித்தது.

2004 மார்ச்சில் நவீட் நவாஸ் இலங்கை ஏ அணியின் அதிகார பூர்வமற்ற நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை ஏ அணிக்கு நவீட் தலைமை வகித்தார். அவரது பலம் வாய்ந்த அணியில் 5 வேகப்பந்து வீச்சாளர்களும், ஒரு சகலதுறை ஆட்டக்காரரும் ஒரேயொரு சுழற்பந்துவீச்சாளரும் இடம்பெற்றனர். இந்த 5 வார கால சுற்றுலாவில் இலங்கை ஏ அணி நான்கு நாட்களைக் கொண்ட மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதுடன் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியது. மேற்கூறிய இலங்கை அணியில் பிரபல பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 2009 இல் நவாஸ் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக இருந்தார். அதனையடுத்து கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக இருந்தார். அதனையடுத்து 19 வயதுக்குட்பட்வர்களுக்கான இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ஆனார்.

41 ஆவது ஒப்சேர்வர் சிறந்த பாடசலை வீரர் விருது 2019 ஐ சிறப்பாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் லேக் ஹவுஸ் நிறுவனம் மற்றும் இலங்கை டெலிகொம் மொபிடெல் தொலைதொடர்பு வலைப்பின்னல் ஆகிய இரண்டுமாகும். 1978/1979 காலகட்டத்தில் ஆங்கில செய்திப் பத்திரிகையான சண்டே ஒப்சேர்வர் ஆரம்பித்த இந்த விருது வழங்கல் நிகழ்வு இப்போது விரிவடைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை டெலிகொம் மொபிடெல் இந்த நிகழ்வை தொடர்ந்து 11வது தடவையாக இம்முறையும் அனுசரணை வழங்கி நடத்துவது குறிப்பிடத்தக்கது. இலங்கை டெலிகொம் மற்றும் மொபிடெல் தலைவர் குமாரசிங்க சிறிசேன மற்றும் மொபிடெல்லின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளின் பெரேரா ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு பெருமை பெற்றுள்ளது.

இலங்கை பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் திறமையை அங்கீகரிக்கும் எந்தவொரு விருது வழங்கல் நிகழ்வும் இல்லாத நேரத்திலேயே லேக்ஹவுஸ் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருது வழங்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிமாவட்ட பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கும் எந்தவொரு திட்டமும் அப்போதைய பாடசாலை கிரிக்கெட்டின் நிர்வாகத்தை பொறுப்பேற்றிருந்த இலங்கை பாடசாலைகள் கிரிக்ட் அல்லது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடமோ இருக்கவில்லை. அதேநேரம் பாடசலைகளின் முதல்தர அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டிகள் முறையாக இடம்பெறவும் இல்லை.

1928 முதல் நாட்டின் பிரபலமான ஆங்கில செய்திப்பத்திரிகையான சண்டே ஒப்சேவர், பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் தேசிய அணியில் இடம்பிடித்து சர்வதேச அரங்கில் பிரபலம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் 41 வருடங்களுக்கு முன் எடுத்த தீர்மானம்தான் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கு விருது வழங்கும் நிகழ்வு. சண்டே ஓப்சேர்வர் பத்திரிகையின் மேற்படி தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டு மேற்படி விருதுகளை வென்ற பல பாடசாலை வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புகழ்பெற்றுள்ளமை அதனை நிரூபித்துள்ளது. 1978 இல் இடம்பெற்ற முதலாவது ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரருக்கான விருது அப்போதைய ரோயல் கல்லூரி தலைவர் ரஞ்சன் மடுகல்லவுக்கு சென்றது. இரண்டாவது 1979 இலும் அதே விருதை மீண்டும் வென்றார் ரஞ்சன் மடுகல்ல. இரண்டு வருடங்களும் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்றமை அவரை பெரிதும் ஊக்குவித்தது. அதனையடுத்து என். சி.சி. கிரிக்கெட் கழக அணியை தலைமை தாங்கி நடத்திய ரஞ்சன் மடுகல்ல. அடுத்து இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியதுடன் சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதான போட்டி தீர்ப்பாளர் என்ற அளவுக்கு உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் 1996 இல் இலங்கைக்காக உலக கோப்பை வென்று கொடுத்து அர்ஜுன ரணதுங்கவும் இரண்டு முறை 1980 மற்றும் 82 ஆகிய வருடங்களில் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வென்றார்.

கடந்த நான்கு தசாப்த காலத்தில் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய சிறந்த கிரிக்கெட் வீரர்களான அசங்க குருசிங்க, ரொஷான் மகாநாம, முத்தையா முரளிதரன், குமார் தர்மசேன, மார்வன் அத்தபத்து, சனத் ஜயசூரிய, திலான் சமரவீர, தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியோர் தமது பாடசாலை காலத்தில் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதிகளை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு மேலும் விருது வழங்கும் நிகழ்வுகள் தற்போது இடம்பெறுகின்றன. இது எமது ஆரம்பகால நோக்கத்தை மேலும் பலப்படுத்துவதாக அமைகிறது. சண்டே ஒப்சேர்வரின் முன்னுதாரணத்தை மேலும் சிலர் பின்பற்றுவது வரவேற்புக்குரியது. இவ்வாறான அனைத்து நிகழ்வுகளும் இறுதியில் பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் முன்னேற்றத்தை மேம்படுத்துவது சிறப்பானதாகும்.

அவ்வாறெனினும இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தாய் நிகழ்ச்சியாக அமைவது ஒப்சேர்வர்- மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கல் நிகழ்வாகும்.

Fri, 04/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை