Header Ads

விஸ்டன் சஞ்சிகையின் பட்டியலில் 3-வது முறையாக தெரிவான விராட் கோலி

சர்வதேச விளையாட்டு போட்டியாளர்களின் தரங்களை மதிப்பிடும் விஸ்டன் சஞ்சிகையில் தொடர்ச்சியாக 3-வது வருடமும் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் பட்டியலில் விராட் கோலி இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

விஸ்டன் சஞ்சிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த பல்துறை போட்டியாளர்களின் பட்டியலை வெளியிட்டு கௌரவித்து வருகின்றது. கடந்த இரண்டு வருடமாக விராட் கோலி பெயர் அதில் இடம்பெற்றிருந்தது.

தற்போது மூன்றாவது முறையாகவும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதுடன், அவருடன் ஜோஸ் பட்லர், சாம் குர்ரான் ஆகியோரது பெயரும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பெண்கள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் ஸ்மிரி மந்தனாவின் பெயரும் இந்தவருடம் வெளியாகியுள்ள சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் சிறந்த ரி 20 கிரிக்கெட் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய பிரிமியர் லீக் தொடர் ஆரம்பிப்பதற்கு முன், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தொடர்ந்து தலைவராக செயற்பட்டு வரும் விராட் கோலி ஒருமுறை கூட சம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்டகாரர் கௌதம் கம்பீர் சாடியுள்ளார்.

டோனி, ரோகித் சர்மா தலா மூன்று முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அவர்களுடன் விராட் கோலியை ஒப்பிட இயலாது. இன்னும் அணித் தலைவர் திறமையை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை அவரை றோயல் அணியின் தலைவராக தக்க வைத்திருப்பதால், அவர் அணிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கௌதம் காம்பிர் கூறியிருந்தார். இதுகுறித்து விராட் கோலியிடம் கேட்டபோது, ‘‘வெளியில் உள்ள நபர்கள் கூறியதை கருத்தில் கொண்டால், நான் வீட்டில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த பருவகாலத்தில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஆறு போட்டிகளிலும் ஆர்சிபி அணி தோல்வியையே சந்தித்துள்ளது. இந்தநிலையில் அணித்தலைவர் பதவியில் விராட் கோலி இன்னும் ‘அப்ரன்டிஸ்’தான் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கௌதம் கம்பீர் கூறுகையில் ‘‘துடுப்பாட்ட விரர் என்பதில் விராட் மாஸ்டர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அணித்தலைவர் பதவியில் அவர் அப்ரன்டிஸ். அவர் இன்னும் ஏராளமாக கற்றுக்கொள்ள வேண்டும். பந்து வீச்சாளர்கள் மீது சாடுவதை விட்டுவிட்டு, தோல்விக்கு காரணத்தை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் எங்கே சறுக்கினார்கள் என்பதை நான் எடுத்துக் கூறுகிறேன். தொடர் ஆரம்பிக்கும் போது மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நேதன் கவுல்டர்-நைல் ஆகியோரால் விளையாட முடியாது என்பது தெரிந்தும், ஏன் அவர்களை தேர்வு செய்தார்கள்.

சமதரை ஆடுகளமான சின்னசாமி மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுடன் முழு பலத்தில் களம் இறங்க வேண்டும். கொல்கத்தாவுக்கு எதிராக சிராஜ் பந்து வீச முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக மார்கஸ் ஸ்டாய்னிஸை பந்து வீச கோலி அழைத்திருந்தார். அதற்குப் பதிலாக பவன் நெஹியை பந்து வீச அழைத்திருக்க வேண்டும். ஏனெனில், ஆடுகளத்தில் பிடிமானம் இருந்தது. ரஸல் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்வார் என்பதை தெரிந்து கொள்ள பெரிய மூளை தேவையில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Fri, 04/12/2019 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.