தற்கொலையாளிகளுள் வனாத்தவில்லில் கைதாகி விடுவிக்கப்பட்டவரும் ஒருவர்

ஓரிரு தினங்களில் உண்மை உறுதியாகும்

வனாத்தவில்லு பிரதேசத்தில் 100 கிலோகிராம் வெடிபொருட்களை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரும் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். மானவல்லையில் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சியாக வனாத்தவில்லு பிரதேசத்தில் 100 கிலோ கிராம் வெடிபொருட்களை வைத்திருந்ததாக நால்வர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் அல்லது இருவர் உயர் மட்ட அரசியல் அழுத்தம் காரணமாக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட நபர் ஒருவரும் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியிருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன் உண்மைத் தன்மையை ஓரிரு தினங்களில் உறுதிப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாவனல்லையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தவல்களை வழங்கியமைக்காகவே தனது செயலாளர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுக் காயமடைந்தார். இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது. இவற்றை முற்றாக இல்லாமல் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மகேஸ்வரன் பிரசாத்

Tue, 04/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை