சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்

சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது. 2013இல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், 2014ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அமுலுக்கு வந்தது.

இந்த ஒப்பந்தமானது, சர்வதேச அளவில் மரபு ரீதியிலான ஆயுத வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும். குறிப்பாக சிறிய ரக ஆயுதங்கள் தொடக்கம் போர் விமானம் வரை இதன் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது பற்றி டிரம்ப் பரிசீலித்து வந்தார்.

இந்த நிலையில், இண்டியானாபொலிஸ் நகரில் நடந்த தேசிய துப்பாக்கி சங்கத்தின் ஆண்டு விழா கூட்டத்தில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் நாம் போட்ட கையெழுத்தை திரும்பப்பெறுகிறோம். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவித்தலை அமெரிக்காவிடம் இருந்து ஐ.நா சபை பெற்றுக்கொள்ளும்” என்று கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, “பாரம்பரிய ஆயுதங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கான ஆயுத விற்பனை ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. எனினும், அந்த ஒப்பந்தம் தவறான வழிநடத்தலின் பேரில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தமாகும்.

எனவே அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் உரிமையை அமெரிக்க அரசியல் சாசனம் வழங்கியுள்ளது.

எனினும், அந்த அடிப்படை உரிமையைத் தகர்க்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், தேசிய துப்பாக்கிச் சங்கம் போன்று ஆயுத உரிமையை நிலைநாட்டுவதற்காகப் போராடும் அமைப்புகள் இருக்கும் வரை அந்த முயற்சி வெற்றி பெறாது” என்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதில் தேசிய துப்பாக்கி சங்கம் கணிசமான பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக அமெரிக்கா உள்ளது. இந்த வரிசையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவை விடவும் அமெரிக்கா 58 வீத ஆயுதங்களை விற்பனை செய்கிறது.

இந்நிலையில் டிரம்பின் இந்த அறிவித்தலுக்கு எதிராக மனித உரிமைக் குழுக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன. “டிரம்ப் அவரது அலுவலகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்” என்று பிரிட்டன் நிழல் வெளியுறவு அமைச்சர் எமலி தோர்ன்பர்ரி குறிப்பிட்டுள்ளார்.

130 நாடுகள் கையெழுத்திட்ட இந்த ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின்படி அரசாங்கம் தனது நாட்டு ஆயுத ஏற்றுமதிகளை காண்காணிக்க வலியுறுத்துகிறது.

இந்த ஆயுதங்கள் இன அழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், யுத்தக் குற்றங்கள் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதை தடுப்பதை நாடுகள் உறுதி செய்யவும் என்று இந்த உடன்படிக்கை குறிப்பிடுகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உட்பட 101 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டு உறுதி செய்துள்ளன. எனினும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோதும் அதனை உறுதி செய்து சட்டமாக்காத 29 நாடுகளுடன் அமெரிக்காவும் தற்போது இணைந்துள்ளது.

இந்த உடன்படிக்கை மூலம் இறைமை கொண்ட நாட்டின் மூடிவை எதிர்க்க சில குழுக்கள் முயற்சிப்பதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. சவூதி அரேபியாவுக்கான பிரிட்டனின் ஆயுத விற்பனையை முடக்க முயற்சிப்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.

யெமனில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட வான் தாக்குதல்களுக்கு சவூதி அரேபியா தனது ஆயுதங்களை பயன்படுத்துவதால் அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதில் மேற்கத்தேய நாடுகள் அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றன.

எனினும் இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட்டார். எனினும், உலகின் மிகப் பெரிய ஆயுத ஏற்றுமதி நாடான அமெரிக்கா, இதுவரை அந்த ஒப்பந்தத்துக்கான பாராளுமன்ற அனுமதியைப் பெற்று அமுல்படுத்தவில்லை.

எனவே, அமுல்படுத்தப்படாத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளது, சர்வதேச அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Mon, 04/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை