அடிப்படைவாதிகள் சிலரே தாக்குதல்களுடன் தொடர்பு

முஸ்லிம் சமூகம் இதில் தொடர்பில்லை - பிரதமர்

பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறிப்பிட்ட சில அடிப்படைவாதிகளே சம்பந்தப் பட்டிருப்பதாகவும் நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் இதில் தொடர்புபடவில்லை எனவும் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சகல சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட்டு வருவதை வரலாறு நெடுகிலும் காணக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.  

தற்கொலை குண்டு பயங்கரவாதத்தை முஸ்லிம் சமுகத்தினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் அப்பாவி முஸ்லிம் சமூகத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது எனவும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலும் பேராயர் இல்லத்திலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள விசேட செய்தியிலே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். 

பிரதமரின் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,  

கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் ஜிஹாத் பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டு அவர்களுடைய ஆயுதங்கள் பல கைப்பற்றப் பட்டன. இதற்கு அப்பகுதியிலுள்ள முஸ்லிம்களின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.   குண்டுகள் தயாரிப்பதற்கான இரசாயனப் பொருட்கள் மற்றும் பெருமளவு உபகரணங்களும்  வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் ஒளிந்திருந்த பயங்கரவாதியும் அவருடைய பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 15பேர் மரணமடைந்துள்ளனர்.மேலும் ஒரு குழுவினர் காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களை இனங்காணும் நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப் பட்டுள்ளன.  

வனாத்தவில்லு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, ஆயுதங்களுடன் 56ரக துப்பாக்கியும் கைப்பற்றப் பட்டுள்ளது. கம்பளை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது பல தகவல்கள் கிடைத்துள்ளன. சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் தற்போது பெருமளவிலானோர் இனங்காணப் பட்டுள்ளனர்.  

இந்தத் தாக்குதல்கள் திட்டமிட்ட அடிப்படையிலே  மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைப்பு ரீதியாக சிறியதொரு குழுவே இதனை மேற்கொண்டுள்ளது. அவர்கள் சாதாரண முஸ்லிம்கள் அல்ல. திசைமாறித் திரியும் அடிப்படைவாத குழுக்களாவர். மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்து அவர்கள் இந்தக் குற்றச் செயல்களை ஆரம்பித்தனர். இது கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் மாவனல்லைப் பகுதியில் புத்தர் சிலைகளை உடைத்தும் அமைச்சர் கபீர் ஹாசிமின் முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளர் மீதும் இவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

(எம்.ஏ.எம். நிலாம்)

Mon, 04/29/2019 - 09:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை