ஆசிய மெய்வல்லுனர் போட்டி நிறைவு

இலங்கைக்கு முதல் பதக்கம்; பதக்க பட்டியலில் சீனா முதலிடம்

23 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டி நேற்று கோலாகலமாக நிறைவு பெற்றது. அத்துடன் 23ம் திகதி இரவு இடம்பெற்ற முப்பய்ச்சல் போட்டியில் விதுஷா லக்க்ஷானி வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.இது இலங்கை பெற்ற முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் பதக்க பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.

கட்டார் குளிரூட்டப்பட்ட கலிபா சர்வதேச விளையாட்டு அரங்கில் கடந்த 21ம் திகதி ஆரம்பமான இந்த மெய்வல்லுனர் போட்டியில் மூன்றாவது நாளில் இடம்பெற்ற பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் லக் ஷானி 13.53 மீற்றர் தூரம் பாய்ந்து மூன்றாமிடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை பெற்றார். இப்போட்டியில் தாய்லாந்தின் பர்னியா சுஅய்மரொயிங், 13.72 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், சீனாவின் ரூய் சேங் 13.65 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இலங்கை சார்பாக பெண்களுக்கான முப்பாய்ச்சலில் நீர்கொழும்பைச் சேர்ந்த விதூஷா லக்ஷானி பங்குபற்றியிருந்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொள்ளும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்ட விதூஷா, கடந்த இரண்டு வருடங்களாக எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றவில்லை.

கொழும்பில் கடந்த மாதம் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட அவர், 13.26 மீற்றர் தூரம் பாய்ந்து ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றார்.

12 வீராங்கனைகள் பங்குபற்றிய பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் (23) இரவு நடைபெற்றது. இதில் இலங்கை சார்பாக களமிறங்கிய விதூஷா, முறையே 13.40, 13.46 மற்றும் 13.53 மீற்றர் தூரங்களைப் பதிவுசெய்து, தனது அதிசிறந்த தூரப் பெறுமதியுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, இரண்டு வருடங்களுக்கு முன் தவறவிட்ட பதக்கத்தை இம்முறை போட்டிகளில் கைப்பற்ற வேண்டும் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விதூஷா, வெண்கலப் பதக்கத்தை வென்று அந்தக் கனவை வெற்றி கொண்டார்.

போட்டியின் பிறகு விதூஷா லக்ஷானி கருத்து தெரிவிக்கையில்

“உண்மையில் இந்த வெற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பைவிட எனது சிறந்து தூரத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இந்தப் போட்டியில் களமிறங்கினேன்.

பதக்கமொன்றை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு இருக்கவில்லை. அதிலும், குறிப்பாக என்னுடன் வந்த சக வீரர்கள் உட்பட பயிற்சியாளர்களுக்கும் என்னால் பதக்கமொன்றை வெற்றிகொள்ள முடியுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை.

எனினும், எதிர்பாரத வகையில் இந்தப் போட்டியில் எனது அதிசிறந்த தூரத்தைப் பதிவு செய்து பதக்கமொன்றை வெற்றிகொள்ள கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி.

கடந்த இரண்டு நாட்களாக இங்கு மிகவும் உஷ்ணமான காலநிலை காணப்பட்டாலும், நேற்றுமுன்தினம் நுவவெரலியாவுக்குச் சென்றது போல மிகவும் குளிராக இருந்தது.

அதிலும் குறிப்பாக, முன் பயிற்சிகளின் போதும் எனக்கு வியர்க்கவில்லை.

ஆனால் எனது தனிப்பட்ட தூரத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தான் நான் களமிறங்கினேன். அதேபோன்று, எனக்கு இந்த ஓடுபாதையில் மிகவும் வேகமாகவும் ஓட முடிந்தது. இறுதியில் நான் நாட்டுக்காக பதக்கமொன்றைப் பெற்றுக்கொண்டேன்” என்றார்.

நீர்கொழும்பைச் சேர்ந்த விதூஷா லக்ஷானி, கடந்த ஞாயிறன்று எமது நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலினால் பலியான தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அந்த செய்தியைக் கேட்டவுடன் நான் மிகவும் அழுதேன். எனது சொந்த இடம் நீர்கொழும்பு.

இந்த தீவிரவாத தாக்குதலினால் எனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலர் உயிரிழந்துவிட்டனர். மிகவும் கவலையாக உள்ளது. நாட்டில் உள்ள பலர் துக்கத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாட்டுக்காக பதக்கமொன்றை வென்று அவர்களுக்கு ஒரு சிறிய மகிழ்ச்சியையாவது கொடுக்க முடிந்தமை எனக்கு ஆறுதலைக் கொடுத்தது. இனிமேலும் இதபோன்ற கொடூரமான தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் எனவும், நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையோடும், புரிந்துணர்வோடும் இருப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.21ம் திகதி முதல் 24ம் திகதி வரை இப்போட்டித் தொடர் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதி நாள் நிகழ்வு நேற்று கட்டார் நேரம் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகி 8.30 மணிக்கு நிறைவு பெற்றது.43 நாடுகளில் இருந்து 700 மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.43 போட்டிகள் இடம்பெற்றன.186 பதக்கங்கள் வெல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பதக்க பட்டியலில் சீனா முதலிடத்துடன் 6 தங்கம்,9 வௌ்ளி ,6 வெண்கலப்பதக்கத்தை பெற்றது.அத்துடன் பஹ்ரைன் 7 தங்கம்,5 வௌ்ளி ,2 வெண்கலப்பதகக்கத்துடன் 14 பதக்கத்துடன் இரண்டாமிடத்தை பெற்றது.இந்தியா 13 பதக்கக்கத்துடன் மூன்றாமிடத்தை பெற்றது.

43 நாடுகள் பங்கேற்ற போட்டியில் 18 நாடுகள் பதக்கம் பெற்றமை விசேட அம்சமாகும்.போட்டியை நடத்தும் கட்டார் 6 வது இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டாரிலிருந்து

பரீத் ஏ .ரகுமான்

 

Thu, 04/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை