எகிப்து ஜனாதிபதியாக சிசி நீடிக்க அதிக ஆதரவு வாக்கு

எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி 2030 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க அனுமதிக்கும் புதிய சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த சட்டத் திருத்தம் குறித்து மூன்று தினங்கள் இடம்பெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் 44.33 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதோடு இந்தத் திருத்தத்திற்கு ஆதரவாக 88.83 வீத வாக்குகளும் எதிராக 11.17 வீத வாக்குகளும் இடம்பெற்றுள்ளன.

கடந்த வாரம் எகிப்து பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த சட்டத் திருத்தத்தில் ஜனாதிபதியின் தற்போதைய பதவிக் காலம் 4 ஆண்டுகளில் இருந்து ஆறாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிசியின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு முடிவடையவிருப்பதோடு அவர் தொடர்ந்து மற்றொரு தவணைக்கு போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் முதல் முறை ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மொஹமட் முர்சியை 2013 ஆம் ஆண்டு பதவி கவிழ்த்த இராணுவ சதிப்புரட்சிக்கு தலைமை வகித்த சிசி, பதவிக்கு வந்த பின் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டு வருகிறார்.

Thu, 04/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை