மாலிங்க மீது வாஸ் நம்பிக்கை

அண்மைக்காலமாக ஐ.பி.எல். உள்ளடங்கலாக உள்நாட்டு போட்டிகளில் திறமையினை வெளிக்காட்டி வரும் லசித் மாலிங்கவின் அனுபவமும், அவரது தலைமைத்துவப் பண்புகளும் 2019ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக அமையும் என இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி, உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் அடங்கிய தமது வீரர்கள் குழாத்தை கடந்த வாரம் அறிவித்திருந்தது. உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் சில வீரர்களின் உள்ளடக்கம், நீக்கம் என்பன ஆச்சரியம் தரும் விடயங்களாக அமைந்திருக்கும் நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் வீரர்கள் தெரிவு தொடர்பில் சரியாகவே நடந்திருப்பதாக சமிந்த வாஸ், நேற்று முன்தினம் மும்பையில் உள்ளுார் டி20 தொடர் ஒன்றினை ஆரம்பிக்கும் நிகழ்வு ஒன்றின் போது பேசியிருந்தார்.

“கடந்த சில மாதங்களாக இலங்கை அணி எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக செயற்பட்டிருக்கவில்லை. எனினும், நான் உலகக் கிண்ணத்திற்காக எமது தேர்வாளர்கள் தெரிவு செய்துள்ள அணி இணைப்பை கருத்திற்கொள்ளும் போது அவர்கள் நல்ல வேலை ஒன்றினையே செய்திருக்கின்றனர் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

நாம் இங்கே இருந்து தான் எடுக்க வேண்டி உள்ளது, இப்போது வீரர்களுக்கு அவர்களை அவர்களே இனம்கண்டு நாட்டுக்காக விளையாட வேண்டி இருக்கின்றது” என சமிந்த வாஸ் கூறியிருந்தார்.

அதேநேரம், இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக 2017ஆம் ஆண்டில் கடமையாற்றிய வாஸ், லசித் மாலிங்கவினை அதிகம் பாராட்டியதோடு அவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் எனவும் தெரிவித்திருந்தார்.

“மாலிங்க உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. அதோடு இலங்கையிலும் அவர் சிறந்தவராக உள்ளார். நாம் அவரை ஒரு பந்துவீச்சாளராக தங்கியிருக்கின்றோம், அவர் அவரது தலைமைத்துவ ஆற்றலினையும் வெளிக்காட்டியிருந்தார்” என்று வாஸ் குறிப்பிட்டார்.

Thu, 04/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை