பாரிஸின் 850 ஆண்டு தேவாலயத்தில் தீ: கோபுரம் சாய்வு; பிரதான கட்டிடம் மீட்பு

இயேசுபிரானின் முட்கிரீடம் பாதுகாக்கப்பட்டது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற நொட்ரே–டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீயினால் அதன் கூம்பு வடிவ கோபுரத்தின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது.

எனினும் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட தீயை கட்டுபாட்டில் கொண்டுவந்த தீயணைப்புப் படையினரால், 850 ஆண்டுகள் பழமையான அந்தக் கட்டிடத்தின் இரு பிரதான கோபுரங்கள் உட்பட பிரதான கட்டிடத்தை பாதுகாக்க முடிந்தது.

தீ ஏற்பட்டு சுமார் ஒன்பது மணி நேரத்திற்கு பின்னரே அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. இதனால் ஏற்பட்ட சேதங்களின் முழு விபரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த தேவாலயத்தில் இடம்பெற்று வரும் புனர்நிர்மாணப் பணிகளே தீ ஏற்படக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பாரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தேவாலய சுவரில் சில வெடிப்புகள் ஏற்பட்டதையொட்டி, அந்த கட்டடத்தின் அமைப்புக்கு சேதம் ஏற்படக்கூடும் என அச்சத்தில் சீரமைப்பு பணிகள் சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

உள்ளுர் நேரப்படி திங்கள் மாலை 6.30 மணியளவில் ஏற்பட்ட தீ, தேவாலயத்தின் கூரை பகுதியில் பரவியதோடு அதன் கண்ணாடி ஜன்னல்கள், மரப்பலகையால் ஆன உட்பகுதி ஆகியவற்றையும் கருகச் செய்ததோடு, தொடர்ந்து அதன் கூம்பு வடிவ கோபுரத்தை கீழே சாய்த்தது.

இந்த கூம்பு வடிவ கோபுரம் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். பிரஞ்சிப் புரட்சியின்போது அகற்றப்பட்ட இது 1860களில் மீண்டும் கட்டப்பட்டது.

தேவாலயத்தின் புகழ்பெற்ற கோபுரங்களையும் தீ சேதமாக்கும் என்ற அச்சம் அதிகரித்தது. எனினும் தீ பரவுவது தணிந்த நிலையில், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரன்ட் நுனேஸ் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நேற்றுக் காலை அறிவிக்கப்பட்டது. எனினும் அது முழுமையாக அணைக்கப்படுவதற்கு சில தினங்கள் எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீ விபத்தினால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், “மிகவும் மோசமான இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்” என்று கூறினார். மேலும் புகழ்பெற்ற இந்த தேவாலயத்தை மீண்டும் புதுப்பிக்க சர்வதேச அளவில் நிதி திரட்டும் திட்டத்தை ஆரம்பிக்க முயற்சி செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்ட தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், தேவாலயத்தில் இருந்து கிளம்பிய தீ பிழம்புகளை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மக்களில் சிலர் வீதிகளில் அழுதவாறு காணப்பட்டனர். வேறு சிலர் பிரார்த்தனை பாடல்களை பாடியவாறு வேண்டினர்.

கத்தோலிக்க மக்கள் புனித வாரம் கொண்டாடவுள்ள நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதை வேதனையுடன் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பாரிஸில் உள்ள பல தேவாலயங்களிலும் இந்த தீ விபத்து ஏற்படுத்திய சோகத்தை பதிவு செய்யும் விதத்தில் தேவாலய மணிகள் ஒலித்தன.

ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல், இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் நொட்ரே–டாம் தேவாலாயத்தில் நடந்த தீவிபத்துக்கு ஆழ்ந்த வருத்தங்களையும், வேதனையையும் பகிர்ந்துள்ளனர்.

தீச்சம்பவம் குறித்து அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்துக்கொண்ட வத்திக்கான், தீயணைப்பாளர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியது.

பாரிஸின் முக்கிய அடையாளச் சின்னகளில் ஒன்றான இந்தத் தேவாலயத்தின் உட்புறத்திலுள்ள கலை வேலைப்பாடுகள் அழிந்து போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

எனினும் தேவாலயத்தில் இருந்த விலைமதிக்க முடியாத கலைப்படைப்புகள் மற்றும் சமயப் பொருட்களை அவசர மீட்புக் குழுவினரால் மீட்க முடிந்துள்ளது. இதில 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் நிர்மாணிக்கப்பட்ட பின் அங்கு வைக்கப்பட்ட, இயேசு சிலுவையில் அறையப்படும் முன்னர் அணிந்ததாக நம்பப்படும் முட் கிரீடம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

தவிர, ஏசுபிரானின் இறுதிக் காலத்தைச் சேர்ந்த சிலுவையின் ஒரு பகுதி, ஓர் ஆணி ஆகியவையும் இந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தன.

எனினும் புனரமைப்பு பணிகளுக்காகக் கடந்த வாரம் முக்கியமான 16 செப்பு சிலைகள் அகற்றப்பட்டன. அதனால் அவை அனைத்தும் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளன.

சிலுவைப் போருக்கு செல்லும் முன்னர் சிலுவை வீரர்கள் இந்த தேவாலயத்திலே பிரார்த்தனை செய்ததோடு, 1804இல் நெப்போலியன் பேரரசராக தம்மை முடிசூடிக் கொண்டதும் இங்காகும்.

பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபில் கோபுரத்தைவிட இந்த தேவாலயத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 13 மில்லியன் மக்கள் கூடுதலாக வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நொட்ரே–டாம் தேவாலய நிர்மாணத்திற்காக 1163 ஆம் ஆண்டு பாப்பரசர் மூன்றாவது அலக்சாண்டர் முன்னிலையில் அடிக்கல் நடப்பட்டதோடு 1260 ஆம் ஆண்டே அதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தி அடைந்தன. இந்த தேவாலயத்தின் மேற்கூரை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டது.

1793இல் பிரெஞ்ச் புரட்சியின்போது இந்த தேவாலயம் பராமரிப்பின்றி போனது. மன்னர்களின் 28 சிலைகள் சேதமடைந்தன. அதன்பின் இந்த தேவாலயம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக 1991 ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடந்தன. அதன்பின் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை