2020 ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு கட்சிக்குள் சவால்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிராக அவரது சொந்த கட்சியில் இருந்து ஒருவர் போட்டியில் குதிதுள்ளார்.

2020 ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக குடியரசு கட்சியில் முன்னாள் மசசுட்ஸ் ஆளுநர் பில் வேல்ட் போட்டியிடுகிறார். தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்சித்து 73 வயது வேல்ட் பிரசார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் காலத்தில் நீதித் திணைக்களத்தில் பணியாற்றிய வேல்ட் 1991–97 காலப்பகுதியில் மசசுட்ஸ் ஆளுநராக பதவி வகித்தார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளில் வெள்ளை மாளிகையை விட்டு நாம் வெளியேறி இருந்தோம், இதே நிலை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடித்தால் அரசியல் பேரழிவு ஒன்று ஏற்படும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

“எனவே, எனது கையை உயர்த்தி போட்டியில் குதிக்கவில்லை என்றால் என்னை பற்றி நானே வெட்கப்படுவதாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

2020 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் தனது வேட்பாளரை வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்கின்றனர்.

பதவியில் இருக்கும் ஜனாதிபதி சாதாரணமாக உட்கட்சிக்குள் போட்டியை சந்திப்பதில்லை என்றபோதும் ஒருசிலர் மாத்திரமே மீண்டும் போட்டியிடுவதில் இருந்து மறுக்கப்பட்டுள்ளனர்.

ஜனநாயக கட்சியில் ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் 18 பேர் உள்ளனர்.

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை