45 மேலதிக வாக்குகளால் பட்ஜட் நிறைவேற்றம்

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

2019 ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வாக்கெடுப்பின் போது 31 பேர் சபையில் சமுகமளித்திருக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எஸ்.பி. திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த. ஜோன் செனவிரட்ண, டிலான் பெரேரா. சுமேதா ஜி.ஜயசேன, சுதர்ஷனி பர்னான்டோபுள்ளே, சந்திம வீரக்கொடி உள்ளிட்டவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

ஜே.வி.பியின் ஆறு உறுப்பினர்களும் வரவு- செலவுத் திட்டத்தை எதிர்த்து தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்த வாக்கெடுப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக இருக்கும் சு.க உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, எதிர்க்கட்சி பிரதம கொரடா மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, திலங்க சுமத்திபால, நிமல் சிறிபால.டி.சில்வா, மஹிந்த சமரசிங்க, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், சாந்த பண்டார உள்ளிட்டோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் ஆதரவாக வாக்களித்திருந்த போதும் ஆறுமுகன் தொண்டமான் சபைக்கு சமுகமளிக்கவில்லை. ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தோவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக 31 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இரண்டாவது வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது வாசிப்பு நேற்றைய தினம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மூன்றாவது வாசிப்பைவிட இரண்டாவது வாசிப்புக்கு எதிரான வாக்குகள் இரண்டால் குறைந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதியே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைய இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் மார்ச் 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெற்றது. பன்னிரண்டாம் திகதி இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 29 பேர் வாக்களிப்பின்போது கலந்துகொள்ளவில்லை.

இவ்வாறான நிலையில் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் கடந்த 13ஆம் திகதி முதல் ஆரம்பமானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளும், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் தோற்கடிக்கப்பட்டிருந்தன. உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களுக்கான ஐந்து தலைப்புக்கள் தவிர்ந்த ஏனைய ஒதுக்கீடுகள் தோற்கடிக்கப்பட்டிருந்தன. இந்த இரண்டு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் குறைநிரப்பு பிரேரணைகள் மூலம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டன.

வரவு- செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாளான நேற்றையதினம் நிதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு விவாதம் நடைபெற்றது. நேற்றையநாள் விவாதத்தை எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன ஆரம்பித்து உரையாற்றினார். இதன் பின்னர் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றினர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இறுதியாக அமைச்சர் மங்கள சமரவீர பதிலளித்து உரையாற்றினார்.

அவருடைய உரையைத் தொடர்ந்து வரவு-செலவுத் திட்டத்தில் சில திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. திருத்தங்களுடன் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டபோது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கமைய தேர்தல் நடத்தப்பட்டது. கோரம் மணி ஒலிக்கப்பட்டு இலத்திரனியல் வாக்களிப்பு முறையூடாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும் ஆளும் கட்சியினர் மேசைகளில் தட்டி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குழுநிலையில் தோற்கடிக்கப்பட்ட மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளும், உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் குறைநிரப்புப் பிரேரணைகளாக எடுக்கப்பட்டன. இவை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டன. எனினும், உள்ளூராட்சி சபைகள் அமைச்சு மீதான வாக்கெடுப்பில் தாம் நடுநிலை வகிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர், சபை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நன்றியுரையாற்றினர். பாராளுமன்றம் மே மாதம் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

Sat, 04/06/2019 - 06:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை