பாதிக்கப்பட்டவர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கிலேயே ஜெனீவா விவகாரத்தை கையாண்டு வருகின்றோம்

*வீண் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்

*ஆரம்பித்த வேலைகளை தொடர கால அவகாசம் தேவை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை சுட்டிக்காட்டியே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தைக் கோருவதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோகங்கள் தொடர்பான அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதேநேரம், பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை ஆற்றுப்படுத்தும் நோக்கிலேயே ஜெனீவா விவகாரத்தைக் கையாண்டு வருகின்றோம். இதில் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி எல்லா விடயங்களை யும் மீண்டும் குழப்பத்தில் தள்ளிவிட வேண்டாம் என்றும் அவர் எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கைவிடுத்தார். பிரதமரின் கீழான தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் இதுவரை முன்னெடுத்த விடயங்களைச் சுட்டிக்காட்டியே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் கால அவகாசம் கோருகிறது. ஆரம்பித்த வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு கால அவகாசம் தேவை. இது தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தத் தேவையில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மின்சாரக் கதிரைக்குத் தன்னை கொண்டு செல்லப்போகின்றனர் எனக் கூறியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரசாரங்களை மேற்கொண்டார்.

எனினும் தற்பொழுது பணம் கொடுத்துக்கூட மின்சாரக் கதிரை பற்றி எவரும் கதைக்க முடியாதளவுக்கு நிலைமைகளை மாற்றியுள்ளோம்.

இந்த நாட்டில் உள்ள சகல இனத்தவர்களும் சமமான பிரஜைகளாகவும், சமமான பொறுப்பைக் கொண்டவர்களாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அங்கு சேதமடைந்த வீதிகள் புனரமைப்பு, பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை அபிவிருத்தி துறைமுகங்கள் அபிவிருத்தி, மற்றும் இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்களையும் கிழக்கில் வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை அபிவிருத்தியையும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 03/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை