பெண்களுக்கான அவசர தொலைபேசி சேவையை நீடிக்க நடவடிக்கை

பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக அறிவிக்கும் 1938 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி சேவையை 24 மணித்தியாலங்களாக நீடிப்பதற்கு ஆலோசனைகள் நடாத்திவருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார, உலர்வலய அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மக்கள் பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,    கல்வித்துறை மட்டுமல்லாது ஏனைய அனைத்து துறைகளிலும் ஆண்களை விட பெண்களே இன்று முன்னிலை வகிக்கின்றனர்.   கிராமப்புற பெண்களது பொருளாதாரத்தினை வலுவாக்குவதற்கு நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். 

எமது நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அதிகளவான பங்களிப்பினை வழங்குவது பெண்களே.   சமூகத்தில் மதிக்கவேண்டிய பெண்கள் இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் இம்சைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

குடும்ப வாழ்கையாக இருந்தாலும் சரி வேலை செய்யும் இடங்களாக இருந்தாலும் இவை இரண்டிலும் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  பொலிஸ் நிலையங்களில் தனியான பிரிவுகளை ஆரம்பித்துள்ளோம் இதுவரையில் 42 பிரிவுகளை ஆரம்பித்துள்ளோம். பெண்கள் அச்சமின்றி அவர்களது பிரச்சினைகளை முறைப்பாடு செய்யமுடியும் என்றார்.  

(அநுராதபுரம் தினகரன் நிருபர்)

Fri, 03/15/2019 - 08:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை